×

வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய வியாபாரி கைது

வேளச்சேரி: வேளச்சேரி பறக்கும் ரயில் நிலைய பார்க்கிங் பகுதியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை திருடிய வியாபாரியை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சென்னை உள்ளகரம், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் கவிதா (39). இவர், கடந்த 10ம் தேதி இரவு வேளச்சேரி பறக்கும் ரயில் நிலைய பார்க்கிங் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் ரயில் மூலம் மயிலாப்பூர் கோயிலுக்கு சென்றுவிட்டு சுமார் 2 மணி நேரம் கழித்து திரும்பினார்.

அப்போது ரயில்நிலைய வளாகத்தில் நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை. அதிர்ச்சியடைந்தார்.புகாரின்பேரில் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில் வேளச்சேரி, விஜயநகர் முதல் பிரதான சாலையை சேர்ந்த இளங்கோவன் (63) என்பவர் கவிதாவின் இருசக்கர வாகனத்தைத் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதேபோல், கடந்த 20ம் தேதி வேளச்சேரி பறக்கும் ரயில் நிலைய பார்க்கிங் பகுதியில் நிறுத்தியிருந்த பைக்கையும் இளங்கோ வன் திருடியிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை இளங்கோவனை கைது செய்து விசாரித்தனர். அவர் நீண்ட காலமாக பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாக தெரியவந்தது. இதனால் அவரிடம் பல்வேறு இருசக்கர வாகனங்களின் சாவி இருந்ததால், அதன்மூலம் வேளச்சேரி பறக்கும் ரயில்நிலைய பார்க்கிங் பகுதியில் நிறுத்தியிருந்த 13க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்து வந்திருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இளங்கோ கொடுத்த தகவலின்படி, திருடுபோன 13 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இளங்கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

The post வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய வியாபாரி கைது appeared first on Dinakaran.

Tags : Trader ,Velachery ,Kavitha ,Bharathidasan Street, Unalakaram, Chennai.… ,Velachery flying railway station ,Dinakaran ,
× RELATED காவலர் குடியிருப்புக்கு விவசாய நிலம்...