×

அறுபத்து மூவருக்கும் மூலமான திருத்தொண்டத் தொகை

சிவபெருமான் ஆதியந்தம் இல்லாதவராக இருப்பதைப் போலவே, அவரது அடியவர்கள் போற்றிப் பின்பற்றி வரும் சைவசமயமும் ஆதியந்தம் அற்றது. சைவசமயத்தில் காலத்தால் கணக்கிட்டு அறிய முடியாத, எண்ணிக்கையில் அடங்காத அடியவர்கள், காலந்தோறும் தோன்றிச் சிவனடியே சிந்தித்துச் சைவ சமயப் பணிகள் ஆற்றி, முத்திப்பேறு பெற்றுள்ளனர். அவர்களது தியாகம், வீரம், பக்தி, அன்பு முதலிய பண்புகள் அளவிடப்பட முடியாதவை. அவை அனைத்தையும் நாம் அறிந்து போற்றி மகிழ்வது என்பது இயலாத காரியம். அதனால், திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமான் சுந்தரரிடம் தானே அடியெடுத்துக் கொடுத்துச், சில அடியவர்களின் பெயரை வரிசைப்படுத்தி அவர்களுக்கு அடியவனாவேன் என்று பாடும்படிச் செய்தார். அந்தப் பெயர் பட்டியலைக் கொண்ட பாடலே திருத்தொண்டத்தொகையாகும். அதில் அறுபது தனியடியார்களின் பெயரையும், ஒன்பது தொகையடியார்
களின் பெயரையும் கூறி அவருக்கு அடிமையாவேன் என்று சுந்தரர் கூறியுள்ளார்.

அதில் இடம் பெற்றிருப்பவர்களையே நாம் அறுபத்துமூவர் என்று இந்நாளில் கொண்டாடி வருகிறோம். இனி தியாகேசப் பெருமான் அருளால் திருத்தொண்டத் தொகை தோன்றிய வரலாற்றைக் காணலாம்.திருக்கயிலையில் சிவபெருமானுக்கு மலர் மாலை தொடுத்தும், விபூதிமடல் தாங்கியும், திருப்பணி செய்து வந்த ஆலால சுந்தரர் சிவனது ஆணையால் மண்மீது வந்த திருநாவலூரில் அவதரித்தார். திருவெண்ணெய் நல்லூரில் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட அவர், தலங்கள் தோறும் சென்று சிவபெருமானைச் சொற்றமிழால் பாடிப்பரவும் வரம்பெற்றார். அவர் தென்னகமெங்கும் பயணித்துப் பல தலங்களைப் போற்றிப் பணிந்தவாறே திருவாரூர் சென்று தங்கினார். அங்கு எழுந்தருளியிருக்கும் ஆரூர்ப்பெருமானிடம் அடிமைத் திறம் பூண்டதுடன், அக்கோயிலில் ஆடல்பணிபுரிந்து வந்த பரவையாரைத் திருமணம் செய்து கொண்டு, அங்கேயே வசித்து வந்தார். அவர்கள் சிவயோகராஜனான தியாகேசரைப் பணிந்து தவயோக நிலையில் நின்று இனிது வாழ்ந்து வந்தனர்.

திருவாரூர் ஆலயத்தில், வெளிப் பிராகாரமான பெரிய பிராகாரத்தின் வடகிழக்கு முனையில் ஆயிரக்கால் மண்டபம் உள்ளது. இதற்குத் தேவாசிரியன் என்பது பெயர். அது தியாகேசரை வணங்க வந்து கூடும்தேவர்கள் தமக்குரிய நேரம் வரும்வரை காத்திருக்குமிடமாகும். அதில் சிவனடியார்கள் வீற்றிருப்பர். திருவாரூர் ஆலய தரிசனம் செய்ய வருபவர்கள், இந்த தேவாசிரிய மண்டபத்தை வலம் வந்து அதிலிருக்கும் அடியவர்களைப் பணிந்து வணங்கிய பின்னரே, திருமூலட்டானநாதரையும், தியாகேசப் பெருமானையும் பணிந்து வணங்குவது வழக்கம். இதனை நாள்தோறும் வலம் வரும் வேளையில், சுந்தரர் சிவனருளைச் சிந்தித் திருக்கும் இந்த அடியவர்களுக்கு அடிமையாவது எந்நாளோ என்று எண்ணுவது வழக்கம். அதற்கான நாளும் வந்தது. ஒருநாள் தியாகேசரைத் தரிசிக்க வந்த சுந்தரமூர்த்தி பக்தியின் முதிர்ச்சியாலும், தியாகேசரை விரைந்து தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும், கோயிலுக்குள் சென்றவர் தேவாசிரிய மண்டபத்தை வலம் செய்யாமலும், அதிலுள்ள அடியவர்களை வணங்காமலும், விரைந்து நேராகத் தியாகராஜர் சந்நதிக்குச் சென்றார். அந்த நாளில் அம்மண்டபத்தில் இருந்த அடியார்களின் நடுவே விறன்மிண்ட நாயனார் என்பவர் இருந்தார்.

அவர் மலையாள நாட்டைச் சேர்ந்த செங்குன்றூரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர். அவர் தேவாசிரியனை வலம் வராமலும், அதிலிருக்கும் அடியவர்களைத் தொழாமலும் செல்லும் சுந்தரரின் செய்கையைக் கண்டு கோபித்தார். அடியவர்களை மதியாத இவரை இப்போதே சைவ நெறியிலிருந்து தள்ளி வைக்கின்றேன் என்றார். அங்கிருந்தவர்கள் ஐயனே! அவர் தியாகேசனின் அருள்பெற்றவர் என்றனர். அடியவர்களை மதிக்காதிருக்கும் இவருக்கு அருள்புரியும் சிவனும் நமக்குப் புறகு என்றார். அதை அறிந்த சுந்தரர், வருந்தினார். சிவபெருமானிடம் சென்று ஐயனே! அடியவர் தம் வருத்தம் தீருவதற்கென் செய்வேன் என்றார். தியாகேசர் அவரிடம், அன்பனே! அடியவர்கள் பெருமையால் என்னை ஒத்தவர்கள், தனியாக நின்று உலகை வெல்லும் ஆற்றல் பெற்றவர்கள். குற்றமில்லாதவர்கள். தமது அடிமைத் திறத்தாலேயே என்னைப் பெற்றவர்கள். அவர்களுடைய பெருமைகளை யாராலும் முழுவதுமாகச் சொல்ல முடியாது. அன்பால் நிறையப் பெற்றவர்கள். தொண்டினில் இன்பம் காண்பவர்கள்.

அவர்களை நீ பணிந்து போற்றுக. அதுவே சிறந்தது என்றார். சுந்தரர் ஒப்பற்ற அடியவர்களுக்கு என் அடிமைத் திறத்தை விளக்கும் வகையில் எப்படித் தொடங்கிப் பாடுவேன் என்று கேட்க, ஆரூர் அழகன் வேதங்கள் மொழிந்த திருவாயால், தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்துக் கொடுத்தார்.சுந்தரர் மகிழ்வுடன் அதையே முதலாகக் கொண்டு திருத்தொண்டத்தொகை என்ற பதிகத்தைப் பாடத் தொடங்கினார். அதில் தனியடியார்களின் பெயரைக் கூறி, அவர்தம் அடியார்க்கும் அடியேன் என்று பாடியவாறே பெருமானை வலம் வந்து, தேவாசிரியனை வலம் வந்து அங்கிருந்த அடியவர்களை வணங்கி, அவர்களின் நடுவில் சென்று அமர்ந்தார். அந்த நிகழ்ச்சியைக் கண்டு அன்பர்களும் அடியவர்களும் மகிழ்ந்தனர்.சுந்தரர் அருளிய திருத்தொண்டத் தொகைப் பதிகமே அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரலாற்றுக்கு மூலநூலாக அமைந்த பதிகமாகும். ஆரூர்ப் பெருமானின் அடிமையாக தான் அடியவர்களுக்கு அடிமை என்று உவந்து கூறிய சுந்தரர் தாம் பாடிய இந்தப் பதிகத்தைக் கேட்டு மகிழ்பவர்கள் திருவாரூர்ப் பெருமானுக்கு அன்பராவார்கள் என்று மொழிந்துள்ளார். இறைவன் அடியெடுத்துக் கொடுத்துப் பாடப்பட்டதால், இப்பதிகத்தின் பெயரான திருத்தொண்டத்தொகை என்பதே தெய்வீகச் சிறப்பு கொண்டதாகப் போற்றப்படுகிறது.

ஜி.ராகவேந்திரன்

The post அறுபத்து மூவருக்கும் மூலமான திருத்தொண்டத் தொகை appeared first on Dinakaran.

Tags : Lord ,Shiva ,Saivism ,
× RELATED திருமுறைகளில் கஜசம்ஹாரம்