×

உயர் ரத்த அழுத்த அபாயத்தில் இருந்த ஆந்திர மாநில கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையில் தாயும், சேயும் நலம்

தஞ்சாவூர், மார்ச் 23: உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் இருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நிறை மாத கர்ப்பிணி பெண்ணை தஞ்சாவூர் அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாநகராட்சி கீழவாசல் ஆட்டு மந்தை தெருவை சேர்ந்தவர் அக்பர் பிரான். இவரது மனைவி சையது அமினா பீ (35). இவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சையது அமினா பீ மகர் நோன்பு சாவடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது 3வது பிரசவத்திற்காக பதிவு செய்தார். வரும் மே மாதம் முதல் வாரம் அவருக்கு குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கணித்திருந்தனர்.

இந்நிலையில் மார்ச் மாதம் தனது வழக்கமான கர்ப்ப கால பரிசோதனை செய்ய கடந்த 18ம் தேதி கணவருடன் மகர்நோன்புசாவடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் வந்திருந்தார். அப்போது அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. சையது அமினாவுக்கு தமிழ் மொழி சரியாக தெரியாது என்பதால் அவரது கணவரிடம் அரசு ராசா மிராசுதார் மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்தார்.

ஆனால் அவ்வாறு அவர்கள் செல்லாமல் மீண்டும் கடந்த 20ம் தேதி மகர்நோன்புசாவடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக வந்தார். அப்போது உயர் ரத்த அழுத்தம் முன்பைவிட அதிகமாக இருந்தது. இதனால் உடனடியாக அரசு ராசா மிராசுதார் மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
ஆனால் சையது அமினா பீ தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலத்தில் பிரசவம் பார்த்துக்கொள்ள விரும்பினார். இதனால் கடந்த 21ம் தேதி தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அப்போது கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம் மற்றும் தலைவலி இருந்ததை அறிந்த மருத்துவர் மீண்டும் அரசு ராசா மிராசுதார் மகப்பேறு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தார். ஆனால் சையது அமினா பீ அரசு மருத்துவமனைக்கு செல்ல மறுத்துள்ளார்.
இதையடுத்து தனியார் மருத்துவர் இது குறித்து மகர்நோன்புசாவடி செவிலியர் அருள்மொழிக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து மருத்துவர் லட்சுமண குமார், சையது அமீனா பீக்கு உயர் ரத்த ரத்த அழுத்தம் இருப்பதால் எந்த நேரத்திலும் வலிப்பு ஏற்பட்டு தாய்-சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அவரது கணவர் அக்பர் பிரானிடம் இரவு 12 மணியளவில் விளக்கினார். இதனையடுத்து நிலைமையை புரிந்து கொண்ட அக்பர் பிரான் உடனடியாக இரவு 2 மணியளவில் மனைவியை அரசு ராசா மிராசுதார் மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சேர்த்த சிறிது நேரத்தில் சையது அமினா பீக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மகப்பேறு துறை தலைவர் மருத்துவர் ராஜராஜேஸ்வரி வழிகாட்டுதல்படி, உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 6.30 மணியளவில் அறுவை சிகிச்சை மூலம் 1.500 கிலோ கிராம் எடை கொண்ட பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு நலமுடன் உள்ளனர். உயிர் காக்கும் உரிய சிகிச்சையை உரிய நேரத்தில் மிகவும் துரிதமாக மேற்கொண்ட மருத்துவர் லட்சுமண குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினருக்கு தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி மற்றும் மருத்துவத் துறையினர் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

 

The post உயர் ரத்த அழுத்த அபாயத்தில் இருந்த ஆந்திர மாநில கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையில் தாயும், சேயும் நலம் appeared first on Dinakaran.

Tags : Andhra state ,Thanjavur ,Thanjavur government ,Thanjavur Municipal Corporation ,Keezhavasal ,Seyum ,
× RELATED ஆந்திரா மாநிலம் சித்தூர்...