×

உச்ச நீதிமன்றத்தில் மனுவை வாபஸ் பெற்றது ஏன்?.. பரபரப்பான பின்னணி தகவல்கள்

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நேற்று காலை 10.45 மணியளவில் இந்த மனு முதலில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் அவசர விசாரணைக்காக குறிப்பிடப்பட்டது. கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, சில முக்கியத்துவம் மற்றும் அவசரமான நிலையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளோம்.

இந்த செயல்முறை தொடர்ந்தால் தேர்தலுக்கு முன், பல மூத்த தலைவர்கள் சிறை கம்பிகளுக்குப் பின்னால் இருப்பார்கள் என்று நான் மிகவும் வருந்துகிறேன். எனவே மனுவை அவசரமாக விசாரிக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். அதற்கு தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில்,’ நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு செயல்பட்டு வருகிறது. அந்த அமர்வு முன்பு நீங்கள் இந்த விஷயத்தை குறிப்பிடலாம்’ என்றார். இதை தொடர்ந்து அபிஷேக்சிங்வி நீதிபதி கண்ணாவின் நீதிமன்றத்திற்கு விரைந்தார். அங்கு கவிதாவின் ஜாமீன் மனுவை விசாரித்து முடித்துவிட்டதால், நீதிபதி தீபங்கர் தத்தாவுடன் வழக்கமான இருநபர் அமர்வில் இருந்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா முன் அபிஷேக்சிங்வி இந்த விஷயத்தை குறிப்பிட்டார்.

அதற்கு,’வழக்கமான அமர்வு சிறிது நேரத்தில் முடிந்த பிறகு நாங்கள் கூடுவோம்’ என்று நீதிபதி கண்ணா கூறினார். பின்னர் பிற்பகலில் நீதிபதி பேலா திரிவேதி வந்தவுடன் அமர்வு மீண்டும் கூடியது. அப்போது மனுவை வாபஸ் பெறுவதாக அபிஷேக்சிங்வி தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் இந்த இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பினர். அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மனுவை திரும்பப் பெறுவதற்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் கெஜ்ரிவாலின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து முடிக்கும் வரை அவரை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினேன். இப்போது கெஜ்ரிவால் மனு வாபஸ் பெறப்பட்டதால், அவர் விசாரணை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார்’ என்றார். இதையடுத்து அபிஷேக் சிங்வியை பார்த்து நீதிபதிகள்,’நீங்கள் விசாரணை நீதிமன்றத்திற்கு செல்லலாம்’ என்று அனுமதி கொடுத்தனர்.

The post உச்ச நீதிமன்றத்தில் மனுவை வாபஸ் பெற்றது ஏன்?.. பரபரப்பான பின்னணி தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Chief Minister ,Kejriwal ,Chief Justice ,TY Chandrachud ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு