×

கெஜ்ரிவால் கைதை கண்டித்து நாடு முழுவதும் ஆம் ஆத்மி, காங். போராட்டம்: டெல்லியில் போக்குவரத்து முடங்கியது

புதுடெல்லி: கெஜ்ரிவால் கைதை கண்டித்து நாடு முழுவதும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி தொண்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் விகாஸ் மார்க், ஐடிஓ மார்க், டிடியு மார்க் மற்றும் கடமைப்பாதை உள்பட பல்வேறு சாலைகளில் ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பல்வேறு முக்கிய இடங்களில் நடந்த போராட்டம் காரணமாக போக்குவரத்து முடங்கியது.

மத்திய டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகம் அமைந்துள்ள சாலையும் ஆம் ஆத்மியினரின் போராட்டம் காரணமாக மூடப்பட்டது. மேலும் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்ட ரோஸ்அவென்யூ நீதிமன்றம் அமைந்துள்ள சாலையிலும் ஆம் ஆத்மி தொண்டர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். ஆம் ஆத்மி போராட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

ஆம் ஆத்மி தலைமை அலுவலகம், பாஜ தலைமை அலுவலகம் அமைந்துள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் சாலையிலும் அக்கட்சி தொண்டர்களும், அமைச்சர்களும் அமைதி வழியில் போராட்டம் நடத்தினர். அப்போது கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

பல இடங்களில் போராட்டம் நடத்திய கட்சியினரை காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். அப்போது ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதேபோல் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி கலைந்து செல்லாமல் போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி அமைச்சர்கள் அடிசி, சவுரப் பரத்வாஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா, அசாம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் ஆம் ஆத்மியினர், காங்கிரஸ்உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். அரியானா மாநிலம் குருஷேத்ராவில் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் மீது போலீஸ் தண்ணீரை பீச்சி அடித்தும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர்.

முதல்வராக நீடிக்க தடை இல்லை சட்ட நிபுணர்கள் கருத்து
மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன்: கைது செய்யப்பட்டாலும் கெஜ்ரிவால் முதல்வராகத் தொடர சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஒரு எம்.எல்.ஏ.வை தகுதி நீக்கம் செய்யப்பட்டவராகவும், அதனால் அமைச்சராக பதவி நீக்கம் செய்யப்பட்டவராகவும் கருதப்படுவது உறுதியான பின்னரே பதவி நீக்க முடியும். மூத்த வக்கீல் விகாஸ் சிங்: சட்டப்பூர்வமாக முதல்வர் பதவியில் நீடிக்க எந்த தடையும் இல்லை என்றாலும், நிர்வாக ரீதியாக அது சாத்தியமற்றது. அரசியலமைப்பின் 361 வது பிரிவின் கீழ் ஜனாதிபதி மற்றும் ஆளுநருக்கு மட்டுமே கைது மற்றும் நீதிமன்றத்தின் முன் நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

மோடி வீடு முற்றுகை – ஆம் ஆத்மி
டெல்லி அமைச்சர் கோபால் ராய் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுகதேவ் ஆகியோரின் தியாக தினமான இன்று டெல்லி ஷஹீதி பூங்காவில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள், தொண்டர்கள் அனைவரும் கூடி ஜனநாயகத்தை காப்பாற்ற உறுதிமொழி எடுப்போம். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் கலந்து கொள்வார். நாளை அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் பிரதமர் மோடியின் உருவ பொம்மைகள் எரிக்கப்படும். 25ம் தேதி(நாளை மறுதினம்) ஹோலி பண்டிகை நாளில் எந்த ஆம் ஆத்மி சார்பில் எந்த நிகழ்ச்சியும் நடத்தாமல், புறக்கணிப்போம். 26ம் தேதி மோடியின் வீட்டை முற்றுகையிடுவோம்” என்று தெரிவித்தார்.

கெஜ்ரிவால் குடும்பத்துக்கு வீட்டு காவல்
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினரை சந்திக்க சென்ற ஆம் ஆத்மி கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து ஆம் ஆத்மி பேரவை உறுப்பினர் துர்கேஷ் பதக் கூறுகையில், “கெஜ்ரிவால் குடும்பத்தினரை சந்திக்க எங்களுக்கு அனுமதி தரவில்லை. அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கொடுங்கோன்மை நீடிக்காது” என்று தெரிவித்தார்.

கெஜ்ரிவால் மீது ஈடி குற்றச்சாட்டுகள் என்ன?
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை விசாரணை நீதிமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள்:
* மதுபானக்கொள்கை மூலம் ஆம்ஆத்மி கட்சி பணம் பெறுவதற்கு முதல்வர் பதவியை கெஜ்ரிவால் பயன்படுத்தினார்.
* டெல்லி அரசின் அமைச்சர்கள், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள், பிற நபர்களுடன் கூட்டுச் சேர்ந்து மோசடி செய்தது டெல்லி கலால் துறை ஊழலின் மன்னன், முக்கிய சதிகாரர் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.
* கோவா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் குற்றத்தின் வருவாய் ரூ.45 கோடி பயன்படுத்துவதில் நேரடியாக ஈடுபட்டார்
* ஆம் ஆத்மி கட்சி கெஜ்ரிவால் மூலம் பணமோசடி குற்றத்தைச் செய்துள்ளது. இந்த குற்றங்கள் பிஎம்எல்ஏ சட்டப்பிரிவு 70ன் கீழ் அடங்கும்
* 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் வேண்டும் என்றே ஆஜர் ஆகவில்லை.

டெல்லி சட்டப்பேரவை கூட்டம் ஒத்தி வைப்பு
தலைநகர் டெல்லியில் நிலவும் தண்ணீர் பிரச்னை மற்றும் கழிவுநீர் பிரச்னை தொடர்பாக விவாதிக்க டெல்லி சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடத்தப்பட இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதால் நேற்று நடைபெற இருந்த பேரவை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி சட்டப்பேரவை வௌியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “டெல்லியில் நிலவும் குடிநீர் பிரச்னை, பாதாள சாக்கடை பிரச்னைகளுக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தலைமை செயலாளர் இன்று(நேற்று) தாக்கல் செய்ய இருந்தார். முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதால் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. வரும் 27ம் தேதி டெல்லி சட்டப்பேரரவை கூட்டம் நடைபெறும் என உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தெரிவித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மக்களுக்கு மோடியின் துரோகம் – கெஜ்ரிவால் மனைவி
கெஜ்ரிவால் கைது குறித்து அவர் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தன் ட்விட்டர் பதிவில், “மோடி தன் அதிகார ஆணவத்தால் மக்களால் 3 முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட கெஜ்ரிவாலை கைது செய்து, அனைவரையும் நசுக்க முயற்சி செய்கிறார். இது டெல்லி மக்களுக்கு மோடியின் துரோகம். உங்கள் முதல்வர் உங்களுடன் இருக்கிறார். அவர் எப்போதும் உங்களுக்காக உழைப்பார். பொதுமக்கள் மிகவும் உயர்ந்தவர்கள். அவர்களுக்கு அனைத்தும் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் மீது விழுந்த கறை தலைவர்கள் கண்டனம்
காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா : நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை அடைய வேண்டும் என்பதால் பாஜ தலைவர்கள் கடும் பதற்றத்தில் உள்ளனர். தேர்தல் தேதி அறிவித்த சில நாட்களில் முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவரை கைது செய்துள்ளது ஜனநாயகத்தின் மீது விழுந்த கறையாகும்.

தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திர பவார்) தலைவர் சரத் பவார்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக பாஜ மிக பெரிய விலையை கொடுக்க வேண்டி வரும்.

மேற்கு முதல்வர் மம்தா பானர்ஜி: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களை குறிவைத்து அமலாக்கத்துறை கைது நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆனால், ஊழல் கறைபடிந்த பாஜ தலைவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்: அரவிந்த் கெஜ்ரிவால் தியாகி. இந்த விவகாரத்தில் இருந்து மீண்டு பெரிய தலைவராக அவர் உருவெடுப்பார். ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் அவருக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ்: தலைவர்களை ஒன்றிய அரசு சிறையில் அடைக்க முடியும். ஆனால் மக்களை உங்களால் எதுவும் செய்யமுடியாது. அவர்கள் உங்களுக்கு (பாஜ) பாடம் கற்பிப்பார்கள்.

மார்க்சிஸ்ட் தலைவர் பிருந்தா கரத்: எதிர்க்கட்சி தலைவர்களை வேட்டையாடுவதற்கு விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறேன்.

டெரிக் ஓ பிரையன் எம்பி(திரிணாமுல் காங்கிரஸ்): சர்வாதிகாரி போல் பிரதமர் மோடி செயல்படுகிறார்.நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிய அரசு கைது செய்து வருகிறது.

இந்திய கம்யூ. பொது செயலாளர் டி.ராஜா : எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகவே கெஜ்ரிவால் கைது போன்ற நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் அரசியல் ரீதியாக மோத வேண்டும். விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளில் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும். அதற்காகவே எதிர்க்கட்சிகளின் மீது ஒன்றிய அமைப்புகளை ஏவி விட்டுள்ளனர்.

சமூக சேவகர் அன்னா ஹசாரே: என்னுடன் இணைந்து மதுவுக்கு எதிராக குரல் எழுப்பிய கெஜ்ரிவால், டெல்லியில் மது கொள்கைகளை வகுத்தது வருத்தம் தருகிறது.மதுபான கொள்கையை வகுக்க வேண்டாம் என்று அவரிடம் சொன்னேன். ஆனால் அந்த கொள்கையை வகுத்தார். அவருடைய இந்த நிலைக்கு அவரேதான் காரணம்.

The post கெஜ்ரிவால் கைதை கண்டித்து நாடு முழுவதும் ஆம் ஆத்மி, காங். போராட்டம்: டெல்லியில் போக்குவரத்து முடங்கியது appeared first on Dinakaran.

Tags : Aam Aadmi ,Congress ,Kejriwal ,Delhi ,New Delhi ,Aam Aadmi Party ,Chief Minister ,Dinakaran ,
× RELATED கை விலங்குக்கு வாக்குகளால் பதிலடி...