புதுடெல்லி: உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்க பாதையை கட்டிய நவயுகா இன்ஜினியரிங் நிறுவனம் தேர்தல் பத்திர திட்டத்தின் கீழ் பாஜவுக்கு ரூ.55 கோடி நன்கொடை அளித்துள்ளது அம்பலமாகி உள்ளது. தேர்தல் பத்திர திட்டம் மூலம் கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ள நிறுவனங்கள், அவை எந்தெந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்டன போன்ற விபரங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், நவயுகா இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட் ரூ.55 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. அந்த தொகை முழுவதும் பாஜவுக்கே கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
நவயுகா இன்ஜினியரிங் நவயுகா குழுமத்தை சேர்ந்த நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் உத்தரகாண்டில் உள்ள சில்க்யாரா-பார்கோட் சுரங்க பாதை கட்டுமான பணிகளை கடந்த 2018ல் தொடங்கியது. இந்த பணிக்கான டெண்டர் கிடைத்ததும்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜவுக்கு நிதி கைமாறியுள்ளது. சுரங்க பணிகள் 2022க்குள் முடிக்க வேண்டும். அதன் பிறகு கட்டுமானத்துக்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட்டது. நவம்பர் மாதம் சுரங்க பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கி கொண்டனர். 16 நாட்களுக்கு பின் அவர்கள் மீட்கப்பட்டனர். சுரங்கம் இடிந்த சம்பவத்தில் நிறுவனத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பார்தி ஏர்டெல்: பாரதி ஏர்டெல் மற்றும் அதன் துணை நிறுவனம் பார்தி டெலிமீடியா நிறுவனம் பாஜவுக்கு ரூ.234 கோடி நன்கொடை அளித்துள்ளன. பார்தி ஏர்டெல் ரூ.197.5 கோடியை பாஜவுக்கு அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சிக்கு ரூ.50 லட்சம், ஆர்ஜேடி கட்சிக்கு ரூ.10 லட்சம் அளித்துள்ளது. பார்தி டெலிமீடியா பாஜவுக்கு ரூ.37 கோடி நன்கொடை அளித்துள்ளது.
கோடக் நிறுவனம்: கோடக் குடும்பத்துக்கு சொந்தமான நிதி நிறுவனம் இன்பினா பைனான்ஸ் நிறுவனம் தேர்தல் பத்திரம் மூலம் பாஜவுக்கு ரூ.60 கோடி நன்கொடை அளித்துள்ளது இணைய தளத்தின் மூலம் தெரியவந்துள்ளது. கோடக் மகிந்திரா வங்கி மற்றும் கோடக் குடும்பத்தினர் இணைந்து இதை நடத்துகின்றனர். பிராமல் நிறுவனம்: பிராமல் குழுமத்தை சேர்ந்த பிராமல் என்டர்பிரைசஸ்,பிராமல் கேபிடல் அண்ட் ஹவுசிங் பைனான்ஸ், பிஎச்எல் பின்வெஸ்ட் நிறுவனங்கள் சேர்ந்து பாஜவுக்கு ரூ.85 கோடி நன்கொடை அளித்துள்ளன.
The post உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்க பாதையை கட்டிய நவயுகா நிறுவனம் பாஜவுக்கு ₹55 கோடி நன்கொடை appeared first on Dinakaran.