×

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி: காஞ்சி கலெக்டர் தகவல்

 

காஞ்சிபுரம், மார்ச் 23: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு வரும் ஏப்.19ம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகள் மற்றும் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட உத்திரமேரூர், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்கள் அனைத்து துறைகளிலிருந்தும் மொத்தம் 6,800 அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடியில் தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டிய அலுவலர்களுக்கான பயிற்சி கால அட்டவணை தேர்தல் ஆணையத்திடமிருந்து வரப்பெற்றுள்ளதை தொடர்ந்து உதவி தேர்தல் அலுவலர்களால் பின்வரும் நாட்களில் குறிப்பிட்டுள்ள இடங்களில் முதற்கட்ட பயிற்சிகள் காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடத்தப்பட உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் நாளை (24ம் தேதி) ஸ்ரீபெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி பணியாளர்களுக்கு ஆலந்தூரில் உள்ள புனித மான்போர்ட் பள்ளி வளாகத்திலும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்கு, காஞ்சிபுரம் பென்னாலூரில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரர பொறியியல் கல்லூரி வளாகத்திலும் பயிற்சிகள் நடக்க உள்ளன.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் நாளை (24ம் தேதி) உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி பணியாளர்களுக்கு ஓரிக்கை – காஞ்சிபுரம் பாரதிதாசன் மேல்நிலை பள்ளி வளாகத்திலும், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி பணியாளர்களுக்கு காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்திலும் பயிற்சிகள் நடைபெறவுள்ளன. இதில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கையேடுகள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் அடிப்படையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சிக்கான விளக்கப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பயிற்சி மையங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மண்டல அலுவலர்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி: காஞ்சி கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchi Collector ,Kanchipuram ,Collector ,Kalachelvi Mohan ,Kanchipuram District ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...