×

உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்கு பணிந்தார் கவர்னர் பொன்முடி மீண்டும் அமைச்சரானார்: உயர்கல்வித்துறை ஒதுக்கீடு

சென்னை: உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கை மற்றும் கடும் கண்டனத்துக்கு பணிந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று பொன்முடிக்கு நேற்று அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து பொன்முடிக்கு மீண்டும் உயர் கல்வி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த 2006-11ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பொன்முடியையும், அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்து 2016ம் ஆண்டு தீர்ப்பு கூறி இருந்தது.

இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட் மறுபடியும் விசாரித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்ததுடன், தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் பொன்முடி அமைச்சர் பதவியையும், எம்எல்ஏ பதவியையும் இழந்தார். இந்நிலையில் பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், குற்றவாளி என தீர்மானித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் கடந்த 12ம் தேதி அறிவித்தனர். அவரது தண்டனைக்கு தடையும் விதிக்கப்பட்டது. இதனால் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரானார்.

இதுகுறித்து சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறும்போது, ‘‘சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் பொன்முடியின் எம்எல்ஏ பதவி மீண்டும் தொடர்வதால் அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளது என்று மார்ச் 5ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணை திரும்ப பெறப்படுகிறது” என்றார்.

இந்நிலையில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ம் தேதி கடிதம் எழுதினார். ஆனால் ஆளுநர் ரவி, ‘‘பொன்முடிக்கு எதிரான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, ரத்து செய்யப்படவில்லை. அதனால் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது” என்று தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ‘‘தமிழ்நாட்டின் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார். முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் ஏன் நிராகரிக்கிறார், அவருக்கு சட்டம் தெரியாதா, இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு ஆலோசனை கூறுங்கள். இல்லையேல் கடுமையான கருத்துகளை பதிவு செய்ய வேண்டியது வரும். உச்ச நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம். 24 மணி நேரம் ஆளுநருக்கு அவகாசம் வழங்குகிறோம்.

இல்லையேல் நாங்கள் ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என கடுமையாக எச்சரித்து இருந்தார். உச்ச நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கையை தொடர்ந்து பொன்முடியை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு கொடுத்து பொன்முடியை அழைத்து அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைப்பாரா, இல்லை தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் நீதிமன்ற கண்டனத்துக்கு ஆளாவதால் தனது ஆளுநர் பதவியையே ராஜினாமா செய்வாரா என்ற பரபரப்பும் ஏற்பட்டது.

இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று மதியம் ஒரு பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டது. அதில், “பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனித்து வந்த உயர் கல்வி துறையை பொன்முடிக்கு ஒதுக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். இதை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்று கொண்டுள்ளார். பதவிப்பிரமாணம் இன்று (நேற்று) பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. அப்போது ஆளுநர், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்” என்று கூறப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று மாலை 3.25 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவரது காரில் பொன்முடி மற்றும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு வந்தனர். முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு வந்திருந்தார். சரியாக 3.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்துக்கு வந்தார். 3.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியதும் தேசியகீதம், தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா பொன்முடியை அமைச்சராக பதவியேற்க வரும்படி அழைப்பு விடுத்தார். இதை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சர் பொன்முடி ‘உளமாற’ உறுதி கூறுகிறேன் என்று கூறி பதவியேற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். ஆளுநர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர் பொன்முடிக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினர். பின்னர் நாட்டுப்பண் இசைக்கப்பட்டு, விழா முடிவடைந்தது. விழா முடிந்து புறப்பட்டபோது ஆளுநர் ஆர்.என்.ரவியும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்து விடைபெற்று சென்றனர்.

* முதல்வருக்கு ஆளுநர் வாழ்த்து
பொன்முடி அமைச்சராக பதவியேற்ற நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு பொன்முடி ஆளுநர் மாளிகையில் அமைச்சராக நேற்று மாலை பொறுப்பேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், ஆளுநரும் முதல்வரும் சில வினாடிகள் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரிடம் இங்கிருந்து நேரடியாக தேர்தல் பிரசாரத்திற்காக திருச்சி செல்கிறேன் என்றார். அதை கேட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வரிடம் ஆல் த பெஸ்ட் என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

* ஆளுநர் கடிதம் வெளியீடு
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று (22ம் தேதி) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘‘முதலமைச்சர், 13.3.2024 நாளிட்ட கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளபடி, க.பொன்முடிக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வி துறை அமைச்சர் பொறுப்பு வழங்கிட ஒப்புதல் அளிப்பதாகவும், இன்று (22.3.2024) பிற்பகல் 3.30 மணிக்கு க.பொன்முடிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்\\” எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, தற்போது அமைச்சர் காந்தி பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்தினை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்வதாகவும், அந்த கடிதத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இனி கூடுதலாக கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்தை சேர்த்து கவனிப்பார். அவரிடம் இருந்த உயர்கல்வி துறை கூடுதல் பொறுப்பு நேற்று முதல் விடுவிக்கப்பட்டது.

* எளிய முறையில் பதவியேற்பு
அமைச்சராக மீண்டும் பொன்முடி நேற்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட குறிப்பிட்ட சில ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சி 7 நிமிடத்தில் முடிந்தது. பதவியேற்பு விழா மிக எளிய முறையில் நடந்து முடிந்தது. அமைச்சராக பொன்முடி பதவியேற்றதை தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

The post உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்கு பணிந்தார் கவர்னர் பொன்முடி மீண்டும் அமைச்சரானார்: உயர்கல்வித்துறை ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Gov. ,Ponmudi ,Supreme Court ,Chennai ,Tamil Nadu ,Governor ,RN Ravi ,Chief Minister ,M K Stalin ,Dinakaran ,
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...