×

கல்வி அதிகாரி நேரடி விசாரணை ஆசிரியைகளை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர் முற்றுகை

*கடத்தூர் அருகே பரபரப்பு

கடத்தூர் : கடத்தூர் வட்டார கல்வி அலுவலர் மீது பாலியல் புகார் தெரிவித்த காவேரிபுரம் தொடக்கப்பள்ளி ஆசிரியையிடம், அரூர் வட்டார கல்வி அலுவலர் நேரடி விசாரணை நடத்திய நிலையில், பள்ளிக்கு களங்கம் ஏற்படுத்திய 2 ஆசிரியைகளையும், இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே காவேரிபுரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு தலைமை ஆசிரியை மற்றும் உதவி ஆசிரியை பாடம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டாக, ஒருவர் மீது ஒருவர், கடத்தூர் வட்டார கல்வி அலுவலரிடம் புகார் கொடுத்தவாறு இருந்தனர். இவர்கள் குழந்தைகளுக்கு சரியாக பாடம் நடத்தாமல் பள்ளியிலேயே ஆபாசமாக பேசி, ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்வதாக பெற்றோர் குற்றம்சாட்டி வந்தனர். சமீபத்தில் இப்பள்ளியின் இடைநிலை ஆசிரியை, கடத்தூர் கல்வி அதிகாரி மீது பாலியல் புகார் தெரிவித்து மகளிர் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.

அதில், கடத்தூர் வட்டார கல்வி அலுவலர், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். அடிக்கடி மெமோ கொடுத்து, களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார். பணி செய்யவிடாமல், தலைமை ஆசிரியர் மூலம் போட்டோ, வீடியோ எடுத்து தொந்தரவு செய்கிறார். என் பேச்சை கேட்காமல் எங்கும் வேலை செய்ய முடியாது என மிரட்டுகிறார். எனவே, முறையான விசாரணை செய்து எனது உயிருக்கும், உடமைக்கும், பணிக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதன்பேரில், அரூர் வட்டார கல்வி அலுவலர் மாதம்மாள், நேற்று அப்பள்ளிக்கு சென்று, சம்மந்தப்பட்ட ஆசிரியையிடம் விசாரணை நடத்தினார். இதனை அறிந்த பெற்றோர் பள்ளி முன் திரண்டனர். தங்களது பிள்ளைகளுக்கு போதுமான கல்வி கற்றுக் கொடுப்பதில்லை. எனவே, தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை ஆகியோரை, உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வி அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு காரணமாக, இப்பள்ளியில் பயின்ற 10க்கும் மேற்பட்ட மாணவர்கள், தனியார் பள்ளியில் சேர்ந்து விட்டனர். வரும் 15 நாட்களுக்குள் 2 ஆசிரியர்களையும் வேறு பள்ளிக்கு மாற்றாவிட்டால், பள்ளியை இழுத்து மூடி பூட்டு போடுவோம். பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என பெற்றோர் தெரிவித்தனர். பின்னர், வட்டார கல்வி அலுவலரிடம் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், அப்பகுதியில் பரபரப்பு
ஏற்பட்டது.

மகளிர் ஆணையத்தில் புகார்

காவேரிபுரம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியையின் பாலியல் புகாருக்குள்ளான கடத்தூர் வட்டார கல்வி அலுவலர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்கு ஓரு மனு அனுப்பியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: கடத்தூர் காவேரிபுரம் தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை, முகாந்திரமற்ற பொய்யான பாலியல் குற்றச்சாட்டை, என் மீது சுமத்தி உள்ளார். கற்றல், கற்பித்தலில் கேள்வி கேட்டதால், இந்த குற்றச்சாட்டு என் மீது வந்துள்ளது. அவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அதனை மறைப்பதற்காக இதுபோன்று புகார் அளித்துள்ளார் என கூறியுள்ளார்.

The post கல்வி அதிகாரி நேரடி விசாரணை ஆசிரியைகளை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Kadatur ,Kaveripuram ,Kadatur district ,Arur ,
× RELATED டூவீலர்கள் மோதிய விபத்தில் விவசாயி பலி