×

ஓசூரில் ஒன்றிய அரசின் திட்ட கடன் உதவி வாங்கி தருவதாக கூறி பாஜ நிர்வாகி டோக்கன் விநியோகம்

*தேர்தல் பறக்கும் படையினர் கணினியை பறிமுதல் செய்தனர்

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறையில் உள்ள நிலையில், பிரதமர் மோடி புகைப்படத்துடன், ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று தருவதாக, நோட்டீஸ் ஆங்காங்கே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓசூர் தாசில்தார் அலுவலகம் சாலையில் உள்ள சி.சி.நகரில் உள்ள டைலர் கடையில், பாஜ நிர்வாகி ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் ரூ.1 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறியதால், அங்கு ஏராளமான பெண்கள் கடன் உதவிக்கு விண்ணப்பம் செய்ய திரண்டனர். அங்கு விண்ணப்பம் செய்ய ரூ.150 முதல் ரூ.200 வரை வசூல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

அதற்கு உத்திரவாதமாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தேர்தல் அலுவலர் பிரியங்கா, சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். அப்போது எந்த ஒரு அனுமதியின்றியும், ஒன்றிய அரசின் திட்டத்தில் கடன் உதவி வாங்கி தருவதாக, பொதுமக்களுக்கு விண்ணப்பம் வழங்கியதாக, அங்கிருந்த டோக்கன்கள் மற்றும் கணினிகளை பறிமுதல் செய்தார். மேலும் அங்கு தேர்தல் பறக்கும் படையினரை வரவழைத்து, டோக்கன் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இது குறித்து தேர்தல் அலுவலர் பிரியங்கா கூறுகையில், ‘தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருந்தாலும், ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டத்தை பெறுவதற்கு, பயனாளிகள் இ-சேவை மையத்தில் விண்ணப்பம் செய்யலாம். ஆனால், இங்கு உரிய அனுமதி பெறாமல், டைலர் கடையில் வைத்து சிலர் ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை வங்கி கடன் பெற்று தருவதாக, பொதுமக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, டோக்கன் வழங்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

இது போன்று பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இந்த திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பொதுமக்கள், இ-சேவை மையங்களில் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்,’ என்றார்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ்,ரூ.1 லட்சம் வரை கடன் வழங்குவதற்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதனை வாங்க வந்தோம். சிலருக்கு டோக்கன் வழங்கி உள்ளனர். ஆனால் இது குறித்து தகவல் அறிந்து அதிகாரிகள் வந்ததால், எங்களுக்கு டோக்கன் வழங்கவில்லை,’
என்றனர்.

The post ஓசூரில் ஒன்றிய அரசின் திட்ட கடன் உதவி வாங்கி தருவதாக கூறி பாஜ நிர்வாகி டோக்கன் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : BAJA ,EU GOVERNMENT ,OSSUR ,Osur ,Krishnagiri District ,Modi ,Government ,EU ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வில் தவறு இருந்தால் ஒன்றிய...