×

நாமக்கல்லில் பரபரப்பு சம்பவம் வங்கி மேலாளரை கொல்ல ₹45 ஆயிரம் கூலிப்படைக்கு கொடுத்த பெண் அதிகாரி

*கைதான 5 பேர் சேலம் சிறையில் அடைப்பு

நாமக்கல் : நாமக்கல்லில், வங்கி மேலாளரை கொல்ல முயன்ற வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.45 ஆயிரம் கொடுத்து கூலிப்படையை அழைத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. ஈரோடு மாவட்டம், பவானி நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் (39). இவர் நாமக்கல் கடைவீதி பகுதியில், பல ஆண்டாக செயல்பட்டு வரும் ஒரு வங்கியின் முதுநிலை மேலாளராக பணி புரிகிறார். நாமக்கல்லில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இதே வங்கியில், உதவி மேலாளராக கரூரை சேர்ந்த காவ்யா (32) பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவரை பிரிந்து வசிக்கிறார்.

வங்கியில் மேலாளர் கொடுக்கும் வேலையை சரியாக செய்து கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. இதை மேலாளர் கண்டித்ததால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் வங்கி மேலாளர் பல ஆண்டுகாலம் இங்கு பணிபுரிந்து வருவதால் உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயரை எடுத்துள்ளார். இதனால் மற்ற ஊழியர்கள் வங்கி மேலாளருக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதனால் காவியாவுக்கு தன்னை யாரும் மதிக்கவில்லை என மனவருத்தத்தில் இருந்துள்ளார். இதற்கு காரணம் வங்கி மேலாளர்தான் என அவர் மீது ஆத்திரத்தில் சொந்த ஊருக்கு சென்று உறவினர்களிடம் புலம்பியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 18ம் தேதி மதியம், வீட்டுக்கு சென்று சாப்பிட்டு விட்டு, வங்கிக்கு திரும்பிய மேலாளர் கோபிநாத்தை, வழிமறித்து 2 பேர் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில், மேலாளர் கோபிநாத்தை, உதவி மேலாளர் காவ்யா கூலிப்படை அமர்த்தி தீர்த்துக் கட்ட முடிவு செய்தது அம்பலமானது.

இது குறித்து போலீசார் கூறியதாவது: வங்கி மேலாளர் கொடுக்கும் பணியை, காவ்யா சரியாக செய்யவில்லை. இதனால் அவருக்கு வெவ்வேறு பணி கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் அவர் சரியாக செய்யவில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காவ்யா, மேலாளரை தீர்த்துக் கட்ட, கரூரில் உள்ள தனது உறவினர்கள் உதவியை நாடியுள்ளார். அவர்கள் கூலிப்படையை சேர்ந்த 3 பேரை அமர்த்தியுள்ளனர். அதற்கு ரூ.45 ஆயிரம் பேசி பணம் கூலிப்படைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஒரு வேனில் நாமக்கல் வந்து, வங்கி இருக்கும் இடம், மேலாளர் வீட்டுக்கு செல்லும் நேரம், திரும்பி வரும் நேரம் ஆகியவற்றை கவனித்துள்ளனர். கோபிநாத்தின் போட்டோவை காவ்யா கூலிப்படைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், கூலிப்படையினர் வங்கிக்கு வாடிக்கையாளர் போல வந்தும், மேலாளரை நேரில் பார்த்து விட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து, கடந்த 18ம் தேதி மதியம், வீட்டில் இருந்து வங்கிக்கு திரும்பிய கோபிநாத்தை, இரண்டு பேர் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளனர். மற்ற 2 பேர், அருகில் யாரும் வராமல் பார்த்துக் கொண்டனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் உதவி மேலாளர் காவ்யா, அவரது மாமாவான சிவக்குமார்(38), கூலிப்படையை சேர்ந்த செல்லீஸ்வரன்(40), பார்த்திபன்(34), தினேஷ்(34) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.

குற்றவாளிகளை அடையாளம் காண அடையாள, அணிவகுப்பு நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். தற்போது மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வரும் மேலாளர் கோபிநாத், சிகிச்சை முடிந்து திரும்பியவுடன், அடையாள அணி வகுப்பு நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். நாமக்கல்லில் உள்ள ஒரு பிரபலமான வங்கியின் மேலாளரை, பெண் உதவி மேலாளர் தீர்த்துக் கட்ட கூலிப்படை அமர்த்திய சம்பவம், வங்கி அலுவலர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

The post நாமக்கல்லில் பரபரப்பு சம்பவம் வங்கி மேலாளரை கொல்ல ₹45 ஆயிரம் கூலிப்படைக்கு கொடுத்த பெண் அதிகாரி appeared first on Dinakaran.

Tags : Salem Jail Namakkal ,Namakkal ,Bhavani Natarajapuram ,Erode district ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...