- ராச்சந்தர்
- திருமலாய்க்
- கோவில்
- சோழ
- முசிறி
- ராச்சந்தர் திருமலை
- கரூர் மாவட்டம்
- திருச்சி-அரவகுரிச்சி நெடுஞ்சாலை
- விராயச்சிலை நாயனார் கோயில்
- டாக்டர்
- நரசிம்மராவ்
- பொன்னம்பலம்
- வேல்மயில்
முசிறி : திருச்சி -அரவக்குறிச்சி பெருவழியில் 22 கிமீ தொலைவிலுள்ள ராச்சாண்டார் திருமலை கரூர் மாவட்டசிற்றூராகும். இவ்வூரிலுள்ள விரையாச்சிலை நாயனார் கோயில் சிறிய குன்றின்மீது அமைக்கப்பட்டுள்ள சோழர் கால கோயில் ஆகும். மருத்துவர் நரசிம்ம ராவ், கோயில் அறங்காவலர்கள் பொன்னம்பலம், வேல்மயில் ஆகியோர் அழைப்பின் பேரில் அக்கோயிலில் திருச்சி எஸ்ஆர் கல்லூரி வரலாற்று துறைத் தலைவர் பேராசிரியர் நளினி தலைமையில் ஆய்வு நிகழ்த்திய முசிறி, அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் அகிலாவும் தேசியக் கல்லூரி வரலாற்றுத்துறை விரிவுரையாளர் செல்வி ஹேமலைலாவும் படியெடுக்கப்படாத பல புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இக்கல்வெட்டுகளை ஆராய்ந்த டாக்டர் மா. இராசமாணிக்க னார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் கலைக்கோவன், ராச்சாண்டார் திருமலைக் கோயில் பொதுக்காலம் 13 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் இறுதி கட்டத்தில் உருவாகியிருக்கலாம் எனத் தெரிவித்தார். மூன்றாம் குலோத்துங்கர், மூன்றாம் ராஜராஜர்,ஒய்சள அரசர்களான வீரசோமேசுவரர், வீரராமநாதர் கல்வெட்டுகள் இங்குள்ளதாக தெரிவித்த அவர் கோயில் கட்டடக்கலையும் வழிபாட்டிலுள்ள பெரியநாயகி அம்மன் திருவுருவும் சோழர் கலைமுறையில் அமைந்துள்ளன என்றார்.
கல்வெட்டுகளில் குன்றணிநல்லூரென்று அழைக்கப்படும் ராச்சாண்டார் திருமலை சோழர் காலத்தில் கொடும்பாளூரை உள்ளடக்கிய உறத்தூர்க் கூற்றத்தில் இணைக்கப்பட்டிருந்தது. கோனாடென்றும் கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாடென்றும் அழைக்கப்பட்ட வருவாய்க் கோட்டத்தில் இணைந்திருந்த இவ்உறத்தூர்க் கூற்றம் இம்மாவட்டத்தின் மிகப் பழைமையான மக்கள் குடியிருப்புகளுள் ஒன்றாகும்.
மூன்றாம் குலோத்துங்கர் ஆட்சிக்காலத்தில் விரையாச்சிலைக் கோயிலில் உற்சவத் திருமேனிகளாகத் தேசநாயகரையும் நாச்சியாரையும் தபஸ்வி ஆலாலசுந்தரர் எழுந்தருளுவித்தார். அவற்றுள் தேசநாயகப் பெருமாளின் வழிபாட்டிற்கும் படையலுக்குமான செலவினங்களுக்காக கோயிலார் மதுராந்தச் சதுர்வேதிமங்கலத்தைச் சேர்ந்த பிராமணர் சிலரிடம் மூவாயிரம் அன்றாடுநற்காசு விலையாகத் தந்து சதுர்வேதிமங்கலத்துப் பிடாகையாக விளங்கிய குடிகாடுகளில் ஒன்றான கறையூரையும் மேற்கறையூரையும் பெற்றனர். இதற்கான ஆவணத்தைக் காரையூர்க் கணக்கர் பிள்ளையாழ்வான் எழுதியுள்ளார்.
மூன்றாம் ராஜராஜரின் அரசாணையாக விளங்கும் கல்வெட்டு ஆலாலசுந்தரர் எழுந்தருளுவித்த இரண்டு உற்சவத் திருமேனிகளின் பெயரிலும் விளங்கிய இரண்டு வேலி நிலத்தை அரசர் வரிநீக்கி அளித்ததாக கூறுகிறது. கொடும்பாளூர் இருக்குவேளார் பரிந்துரையேற்று இந்நிலத்தின் மீதான அந்தராயம், பாட்டம் உள்ளிட்ட வரிகளை வருவாய்த் துறையினர் நீக்குமாறு ஆணையிட்ட அரசர், அதை அரசின் வரிப்பொத்தகத்தில் தக்கவாறு பதிவுசெய்துகொள்ள வரிக்கூறு செய்வாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நெறியிடைச் சோழ மூவேந்தவேளான் இதற்கான ஓலையை எழுத, அதில் ஆறு அரசுஅலுவலர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இவ்விரண்டு ஆவணங்களாலும் சோழர் கால நிலவிற்பனை, வரியினங்கள், அரசாணையின் அமைப்பு முறைகள், கோயில் அலுவலர்கள் எனப் பல தரவுகள் வெளிப்பட்டிருப்பதாக கலைக்கோவன் தெரிவித்தார்.கோயிலின் பல இடங்களில் கல்வெட்டுகள் சிதறியிருப்பதாகவும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்த பேராசிரியர் நளினி மேலும் பல கல்வெட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறினார்.
The post ராச்சாண்டார் திருமலைக் கோயிலில் சோழர்கால வரியினங்களை அறியும் புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.