×

தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியல்.. கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!!

டெல்லி: தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியல் என்று காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணைக்குப் பின் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது.

கெஜ்ரிவால் கைதுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது. தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியல் என்று அவர் கூறினார்.

மோடி அச்சப்படும் ஒரே தலைவர் கெஜ்ரிவால்: ஆம்ஆத்மி
பிரதமர் நரேந்திரமோடி அச்சப்படும் ஒரே தலைவர் அரவிந்த கெஜ்ரிவால் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜனநாயக முறையில் பாஜகவால் வெற்றி கொள்ளமுடியவில்லை. கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறையை ஏவி கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது பாஜக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெஜ்ரிவால் கைதுக்கு கேரள முதல்வர் பினராயி கண்டனம்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் நடவடிக்கைகளுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சி. இது ஜனநாயக நடைமுறைக்கு அஞ்சுபவர்களின் கோழைத்தனத்தை காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

‘கெஜ்ரிவால் சிந்தனைகளை கைது செய்யமுடியாது’: பஞ்சாப் முதல்வர்
அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்திருக்கலாம்; அவரது சிந்தனைகளை உங்களால் கைது செய்யமுடியாது என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் சாதாரண மனிதர் அல்ல; அவர் சித்தாந்தவாதி என்றும் அவர் கூறியுள்ளார்.

‘முதலமைச்சர் கைது என்பது இதுவே முதன்முறை’: அதிஷி
இந்தியாவிலேயே ஒன்றிய அரசால் முதலமைச்சர் கைது செய்யப்படுவது இதுவே முதன்முறை என்று டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்குப் பின் ஒரு முதலமைச்சர் கைது செய்யப்படுவதும் இதுவே முதன்முறை. உச்சநீதிமன்றம் இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் என்று நம்புகிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் கெஜ்ரிவாலின் பிரச்சாரத்தை முடக்கவே கைது நடவடிக்கை. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு I.N.D.I.A. கூட்டணி கட்சியினர் அனைவரும் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர் என்று அதிஷி கூறினார்.

பழிவாங்கும்அரசியலில் ஒன்றிய அரசு ஈடுபடுகிறது: காங்கிரஸ்
எதிர்க்கட்சி தலைவர்களை கைதுசெய்து பழிவாங்கும் அரசியலில் ஒன்றிய அரசு ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்று கே.சி.வேணுகோபால் உறுதியளித்துள்ளார். மக்களவை தேர்தலில் வெற்றிபெற முடியாது என்று தெரிந்ததால் எதிர்க்கட்சிகளை பா.ஜ.க. பழிவாங்குகிறது. கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கைது, முடியாட்சி நாடாக மாற்ற முயற்சிக்கும் செயல் என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

The post தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியல்.. கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,BJP ,Delhi ,Secretary General ,Priyanka Gandhi ,Enforcement Department ,Chief Minister ,Arvind Kejriwal ,
× RELATED மருத்துவ உதவி கோரிய டெல்லி முதல்வர்...