×

நாடாளுமன்ற தேர்தல் 2வது நாளும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை

 

திருப்பூர், மார்ச் 22: நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், 2-வது நாளான நேற்றும் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 27-ம் தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம்.

28-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 30-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-ம் தளத்தில் கலெக்டர் அறை மற்றும் குமரன் ரோட்டில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய 2 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன.

வேட்பாளர்கள் வேட்பு னுத்தாக்கல் செய்யவற்கு முன்னதாக வேட்பு மனு சான்றிதழ்களை சரி பார்க்க அதிகாரிகள் குழுவும் அமைக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வேட்பாளர் உட்பட 5 பேருடன் மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வேட்பு மனு தொடங்கிய நிலையில் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இதற்கிடையே 2-வது நாளான நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெற அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இன்று (22ம் தேதி) வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post நாடாளுமன்ற தேர்தல் 2வது நாளும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...