×

100 நாட்கள் மது அருந்தாமல் இருந்ததை பேனர் வைத்து கொண்டாடிய வியாபாரி: ரூ.80 ஆயிரம் கடனை அடைத்ததாக மகிழ்ச்சி

சென்னை: பூந்தமல்லியைச் சேர்ந்தவர் சிவகுமார் (42). இவர் பூந்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தள்ளு வண்டியில் கற்றாழை ஜூஸ் வியாபாரம் செய்து வருகிறார்.‌ இவரும், இவரது நண்பர் ஒருவரும் தினமும் மது அருந்துவது வழக்கமாம். அதுவே தொடர்கதை ஆகி தினமும் அளவுக்கு அதிகமாக குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகினர். அப்போது, இவர்களுக்கிடையே மது குடிப்பதை நிறுத்துவது குறித்து போட்டி எழுந்தது. இதில் சிவக்குமார் குடிக்காமல் 100 நாட்களை கடந்து விட்டார்.

ஆனால், அவரது நண்பர் இதில் தோற்று விட்டார். இந்நிலையில், சிவக்குமார் தனது கடையின் அருகே அவரது புகைப்படத்துடன், வெற்றிகரமாக 100 நாட்கள் மது அருந்தவில்லை என்று பேனர் வைத்துள்ளார். மேலும் அந்த பேனரில் எந்த நேரத்திலும் நிறம் மாறாத பூ நட்பு, என அச்சிடப்பட்டுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைத்து பார்த்திருப்போம். ஆனால், 100 நாட்கள் மது குடிக்காமல் இருந்ததற்கு அவரே அவரை வாழ்த்தி பேனர் வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சிவகுமார் கூறுகையில், ‘‘மது குடிக்காமல் இருப்பது தொடர்பாக எனக்கும், எனது நண்பருக்கும் போட்டி வைத்துக்கொண்டோம். அதில், நான் 100 நாட்கள் மது குடிக்கவில்லை. அதனை கொண்டாடும் விதமாக நானே என்னை வாழ்த்தி பேனர் வைத்துக் கொண்டேன். தினமும் பணத்தை சேமித்து வந்த நிலையில், எனக்கிருந்த ரூ.80 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்திவிட்டேன். தற்போது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.

இதனை அறிந்த பொதுமக்கள் எனக்கு வாழ்த்து தெரிவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,’’ என்றார். திருமணம், பிறந்தநாள், காதுகுத்து, திருவிழா, கட்சிக் கூட்டம், தேர்தல், சினிமா இப்படி எல்லாவற்றிற்கும் பேனர் வைப்பது நமது கலாச்சாரங்களில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், 100 நாட்கள் மது குடிக்காமல் இருந்த வியாபாரி தனக்குத் தானே வாழ்த்து பேனர் வைத்துக்கொண்டதை பூந்தமல்லி நகர மக்கள் வியப்படைந்துள்ளனர்.

The post 100 நாட்கள் மது அருந்தாமல் இருந்ததை பேனர் வைத்து கொண்டாடிய வியாபாரி: ரூ.80 ஆயிரம் கடனை அடைத்ததாக மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Shivakumar ,Poonthamali ,Poonthamalli Government Secondary School ,Dinakaran ,
× RELATED நம்புங்கள்… நான் முதல்வராவேன்; கர்நாடக துணை முதல்வர் திடீர் பேச்சு