×

பெட்ரோல் குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு நாடகம் அம்பலம் மருதுசேனை நிறுவனர் கைது

கள்ளிக்குடி: பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக நாடகமாடிய மருதுசேனை நிறுவனர் ஆதிநாராயணனை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டியைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் (55). மருதுசேனை அமைப்பின் நிறுவனரான இவர், தனத கார் மீது, கடந்த 14ம் தேதி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதுடன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்றதாக கள்ளிக்குடி போலீசில் புகார் அளித்தார். இந்த தாக்குதலில் ஈடுபட்டோரை உடடினயாக கைது செய்யக்கோரி அவரும், அவரது அமைப்பினரும் கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டி விலக்கு மற்றும் திருமங்கலம் கப்பலூர் டோல்கேட் ஆகிய இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஆதிநாராயணன் கொடுத்த புகாரின் பேரில், கள்ளிக்குடி போலீசார் 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இருப்பினும் ஆதிநாராயணன் புகார் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, தன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அவர் கூறியதில் உண்மை இல்லை என தெரியவந்தது. மேலும், இவரது காரில் மோதிய நபர்கள் மீது ஆதிநாராயணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசாருக்கு தெரியவந்து உள்ளது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது, பொய் புகார் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தி பொது அமைதியை சீர்குலைத்ததாக வழக்கு பதிவு செய்த கள்ளிக்குடி போலீசார், ஆதி நாராயணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உட்பட 7 பேரை நேற்று கைது செய்து திருமங்கலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மக்களவை தேர்தலில் ஆதிநாராயணன் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பெட்ரோல் குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு நாடகம் அம்பலம் மருதுசேனை நிறுவனர் கைது appeared first on Dinakaran.

Tags : Ambalam Marutusenai ,Kallikudi ,Adinarayan ,Marutusena ,Adinarayanan ,Mayitanpatti ,Madurai district ,Marutusenai ,
× RELATED 8 பேர் மீது வழக்கு பதிவு