×

சிறுவானூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை ஆந்திராவிலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ₹17.39 லட்சம் பறிமுதல்: உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர், மார்ச் 21: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் பறக்கும் பணியினர் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி வாகன சோதனை திருவள்ளூர் மாவட்டத்தில் தீவிர படுத்தப்பட்டுள்ளது. என் நிலையில் ஆந்திரா மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் சீனிவாச ரெட்டி(55). இவர் தனது பெண்ணின் திருமணத்திற்காக நகையை எடுக்க ₹17 லட்சத்தி 39 ஆயிரத்து 80 ரொக்கப் பணத்தை எடுத்துக் கொண்டு திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் அடுத்த சிறுவானூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிரவீன் தலைமையிலான குழுவினர் சீனிவாச ரெட்டி வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். இதில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ₹17 லட்சத்து 39 ஆயிரத்து 80 ரூபாயை பறிமுதல் செய்து திருவள்ளூர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வாசுதேவனிடம் ஒப்படைத்தனர்.

₹72,000, பரிசுப்பொருட்கள் பறிமுதல்
பொன்னேரியில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மெதூர் பகுதியில் முறையான ரசீது இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ₹72,000, முறையான ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ₹30 ஆயிரம் மதிப்புள்ள 20 பரிசு தொகுப்புகள் அடங்கிய பைகள் பறக்கும் படை சோதனையில் சிக்கியது. இதனை பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொன்னேரி சார் – ஆட்சியர் வாஹே சன்கேத் பல்வந்த் முன்னிலையில் வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தாசில்தார் மதிவாணன், பறக்கும் படையின் சிறப்பு தனி வட்டாட்சியர் சித்ரா, காவல்துறை உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், தலைமை காவலர்கள் ராமு, கமலக்கண்ணன், ஓட்டுநர் விக்னேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள தேர்தல் இயந்திரத்தை கையாளும் முறை குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட இருக்கின்ற வாக்குச்சாவடி இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பயிற்சி அரங்கத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நேற்று நடந்தது. இதில் வாக்குச்சாவடி இயந்திரம் செயல்படும் முறை, கையாளும் விதம், இயந்திரங்களை சீல் வைத்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்புதல் வரை எவ்வாறு இயந்திரத்தை கையாள்வது என்பது குறித்து பொன்னேரி சப்-கலெக்டர் வாஹே சங்கத் பல்வந்த் முன்னிலையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பொன்னேரி தாசில்தார் மதிவாணன், பொன்னேரி சப்-கலெக்டர் நேர்முக உதவியாளர் சுரேஷ், தேர்தல் தனி வட்டாட்சியர் கனகவல்லி, மண்டல துணை வட்டாட்சியர் கந்தன், சப் – கலெக்டர் நேர்முக எழுத்தர் செல்வேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post சிறுவானூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை ஆந்திராவிலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ₹17.39 லட்சம் பறிமுதல்: உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Siruvanur ,Andhra Pradesh ,Assistant Election Officer ,Tiruvallur ,Tiruvallur district ,Election Commission of India ,Siruvanoor ,Andhra ,Dinakaran ,
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...