×

உலக தண்ணீர் தினம் – 2024 அனைத்து அரசு பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்க வலியுறுத்தல்

திருவள்ளூர், மார்ச் 21: நாம் அனைவரும் தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து தண்ணீரை வீண் செய்யாமல், மாசுபடுத்தாமல், சிக்கனமாக பயன்படுத்தவே ஆண்டுதோறும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1993ம் ஆண்டு முதல் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நீர்வளத்தை மனிதன் தன் தேவைக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காகவே இந்த தினம் அனுசரிக்கப்படுகின்றது.

இவ்வருடத்திற்கான கருத்துரு ‘அமைதிக்கான நீர்’ என்பதாகும். நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு” என்ற குறளில், கூறுவதுபோல் நீர் இல்லாமல் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் நிலை பெற்று வாழ முடியாது. அந்த நீரை உலகத்திற்கு வழங்குகின்ற மழை இல்லையென்றால் இவ்வுலகில் எந்த ஜீவராசிகளும் வாழ்ந்திட முடியாது என்பதை மக்கள் உணர்ந்து தண்ணீரை உபயோகிக்கும் பொழுது தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். தண்ணீர்ப் பயன்பாட்டை முறையாக அளவிடுவதற்கு உங்கள் வீடுகளில் குடிநீர் மீட்டர் பொருத்துங்கள். தண்ணீர் விணாவதைத் தடுக்க குடிநீர்க் குழாய்களை பயன்பாட்டில் இல்லாத போது மூடி வைக்கவும். கழிப்பறைகள், குடிநீர்க் குழாய்களில் சேதமடைந்த குழாய்களிலிருந்து வரும் நீர் கசிவுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

காய்கறிகள் கழுவிய மற்றும் சலவை எந்திரத்தில் பயன்படுத்திய தண்ணீரை தாவரங்களுக்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்துங்கள். தண்ணீரை சேமிக்க குழாய்கள், ஷவர்கள், கழிப்பறைத் தொட்டி போன்றவற்றிற்கு தண்ணீரை சீராக வெளியேற்றும் வகையிலான சாதனங்களைப் பொருத்த வேண்டும்.வீடுகளில் கை கழுவும் போதும், குளிக்கும்போதும், சமையல் செய்யும் போதும், ஏற்படும் கழிவுநீரை தாவரங்களுக்கு பாய்ச்சி உபயோகப்படுத்த வேண்டும்.

பாரம்பரிய நீர் நிலைகளை பராமரித்து மேம்படுத்துவதற்கு மரக்கன்றுகளை வளர்ப்போம்! மழைநீர் சேமிப்போம்! என மக்கள் அனைவரும் உறுதி ஏற்கவேண்டும். மேலும், மேற்கண்ட உறுதிமொழியை திருவள்ளூர் மாட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கும், தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளிகளுக்கும் உறுதிமொழி ஏற்று அதனை பின்பற்றுமாறு திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post உலக தண்ணீர் தினம் – 2024 அனைத்து அரசு பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : World Water Day – 2024 ,Thiruvallur ,World Water Day ,
× RELATED தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி