×

அனுமதியின்றி வெட்டப்பட்ட அயினிப்பலா மரம்

 

கூடலூர், மார்ச் 21: கூடலூர் கள்ளிக்கோட்டை சாலை செம்பாலா பகுதியில் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி இருந்த பழமையான அயினிப்பலா மரம் ஒன்று அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள தனியார் பள்ளி மாணவர்கள் அதிகமாக சென்று வரும் இந்த சாலையில் இது ஆபத்தான மரம் என்று கூறி ஒரு சிலர் அனுமதி கேட்டதின் பேரில் வருவாய்த்துறையினர் அனுமதி அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக நெடுஞ்சாலை, வனத்துறைக்கு தகவல் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் 2 மரங்களை வெட்ட அனுமதி அளித்ததாகவும் ஒரு மரம் வெட்டப்பட்ட பின்னர் அப்பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் இந்த மரங்களால் ஆபத்துகள் எதுவும் இல்லை என்பதால் மற்றொரு மரத்தை வெட்ட தடை விதித்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் வெட்டப்பட்ட மரமும் அப்பகுதியிலேயே விடப்பட்டுள்ளது. மரங்களை வெட்டி கடத்தும் மரக்கொள்ளையர்களின் கைவரிசை இதன் பின்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது. வன நிலம், வருவாய் நிலம் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள விலை உயர்ந்த மரங்களை வெட்டி கடத்தும் கும்பல்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சரியாக கவனித்து விடுவதால் அவர்களின் வேலை இலகுவாக முடிந்து விடுகிறது. கூடலூர், பந்தலூர் சுற்றுவட்ட பகுதியை அதிக அளவில் காணப்பட்ட அயினிப்பலா, ஈட்டி, வெண் தேக்கு போன்ற அரிய வகை உள்ளிட்ட பல்வேறு விலை உயர்ந்த மரங்கள் இந்த கும்பல்களின் நடவடிக்கை காரணமாக வெகுவாக குறைந்து போய் உள்ளது. பறவைகளுக்கும் குரங்குகளுக்கும் எல்லா காலங்களிலும் உணவளிக்கும் மரமாக அயினிப்பலா மரங்கள் உள்ளன.

சாலை ஓரங்களில் உள்ள அபாயகரமான மரங்களை மட்டும் வெட்ட மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள அனுமதியை பயன்படுத்தி இது போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் கும்பலுக்கு வருவாய் துறையினரும் துணை போயுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் பட்டா நிலங்கள் உள்ளவர்கள் தங்கள் வீடுகளை ஒட்டி உள்ள அபாயகரமான மரங்களை வெட்டுவதற்கு வருவாய் துறையிடம் அனுமதி பெற அலைந்து திரிகின்றனர். மாவட்ட நிர்வாகம் இதில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post அனுமதியின்றி வெட்டப்பட்ட அயினிப்பலா மரம் appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Kudalur Kallikottai Road Sembala ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...