×
Saravana Stores

பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கும் ஊசுட்டேரி நடைபாதை பூங்கா

*வனத்துறை ஊழியர்கள் அலட்சியம்

வில்லியனூர் : வில்லியனூர் அருகே உள்ள ஊசுட்டேரி புதுவை-தமிழக பகுதிகளை உள்ளடக்கியது. இந்த ஏரிக்கு கோடைக்காலங்களில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் இனப்பெருக்கத்திற்கும், உணவுக்கும் வந்து செல்கிறது. இந்த பறவைகளை பாதுகாக்க கடந்த 2008ம் புதுவை அரசு ஊசுட்டேரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசும் பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. பிறகு பறவைகளை ஏரியின் உள்ளே சென்று காண்பதற்கு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு குழாம் அமைக்கப்பட்டது.

ஆகையால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் வனத்துறை சார்பில் சுற்றுலாவினரை கவரும் வகையில், நடைபயிற்சி செய்யும் வகையிலும் ஊசுட்டேரி சாலையோரம் பல லட்சம் செலவில் நடைப்பாதை பூங்கா அமைக்கப்பட்டு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டது. இந்த பூங்கா ஊசுடு முதல் பத்துக்கண்ணு வரை அமைக்கப்பட்டு நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக படகு குழாம் வரை கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் அழகு பூச்செடிகள், மரங்கள் போன்றவை நடப்பட்டுள்ளது. இதனை பராமரிக்க வனத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் விவசாய நிலத்தில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் வனத்துறை ஊழியர்கள் நடைப்பாதை பூங்காவை பராமரிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.இதனால் பூங்காவில் தேவையில்லாத செடிகொடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. மேலும் பூச்செடிகள், மரங்கள் போன்றவை தண்ணீர் இல்லாமல் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.வனத்துறை ஊழியர்கள் தினமும் ஊசுட்டேரிக்கு வருகின்றனர். ஆனால் பறவைகள் வேட்டையாடுவது, மீன்பிடிப்பது போன்றவற்றை கண்காணிப்பது கிடையாது.

மேலும், நடைப்பாதை பூங்காவை பராமரிப்பதும் கிடையாது. அவர்கள் கடைமைக்கு என்று பணியாற்றி வருகின்றனர். வனத்துறையில் பணிபுரியும் ஊழியர்களை அதிகாரிகள் கண்காணிக்காமல் தான்தோன்றி தனமாக செயல்பட்டு வருகின்றனர். எனவே தலைமை செயலர், துறை செயலர் மற்றும் வனப்பாதுகாவலர் ஆகியோர் வனத்துறையை நல்வழி பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

பறவைகள், வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும். பல லட்சம் செலவு செய்து ஊசுட்டேரி சாலையில் அமைக்கப்பட்ட நடைப்பாதை பூங்காவை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கும் ஊசுட்டேரி நடைபாதை பூங்கா appeared first on Dinakaran.

Tags : Oosutteri ,Willianur ,Puduvai- ,Puduvai government ,Dinakaran ,
× RELATED புதுவையில் தாமதமாக விண்ணப்பித்த மாணவி கலந்தாய்வில் பங்கேற்கலாம்