×

வாட்டி வதைக்கும் வெயில்கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி அமைத்த தன்னார்வலர்கள்

*குடவாசல் பகுதி பொதுமக்கள் பாராட்டு

வலங்கைமான் : வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் குடவாசல் பகுதியில் சாலையில் செல்பவர்களுக்கு இலவச நீர் மோர், கால்நடைகளுக்கும் தனியாக நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது.இன்னும் கோடைகாலத்தில் அதன் தாக்கம் எப்படி இருக்குமோ என இப்போதே நினைக்க வைக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்து வருகிறது.சாலையில் நடந்து செல்லும் மக்கள் வெயிலின் தாக்கத்தால் தொப்பி அணிந்தும், துப்பட்டா மற்றும் துண்டால் போர்த்தியபடியும், தலைகவசம் அணிந்தபடியும் சாலைகளில் செல்கின்றனர். இதுமட்டுமின்றி, அனல் காற்றும் வீசி வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி குடவாசல் பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் பால்ராஜ் மற்றும் குருசாமி ஆகியோர் இணைந்து குடவாசல் கொரடாச்சேரி சாலையில் விஐபி நகர் பகுதி சாலை ஓரத்தில் நீர் மோர் பந்தல் அமைத்து சாலையில் செல்லும் பொது மக்களுக்கு இலவசமாக சுவையான நீர்மோர் வழங்கி வருகின்றனர். மேலும் கடும் வெப்பத்தால் வாய்க்கால்களும், ஆறுகளும் காய்ந்து விட்டதால் கால்நடைகள் தண்ணீர் இன்றி தாகத்தால் வாடுகின்றன. மேய்ச்சலுக்காக செல்லும் கால்நடைகளுக்கு தண்ணீர் குடிக்க நீர் மோர் பந்தல் அருகிலேயே தனியாக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

வெயிலில் சாலை வழியாக செல்லும் கால்நடைகள் இந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டு தாகம் தீர்த்து செல்கின்றன. இங்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் தினமும் முறையாக தூய்மை செய்யப்பட்டு சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டு வருவதால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் நீர் மோர் அருந்தி தங்களுடைய தாகத்தை தனித்து செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் அவர்களை பாராட்டி வருகின்றனர்.

The post வாட்டி வதைக்கும் வெயில்கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி அமைத்த தன்னார்வலர்கள் appeared first on Dinakaran.

Tags : GUDAVASAL AREA ,VALANGAIMAN ,Tamil Nadu ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு