×

திருவண்ணாமலை, ஆரணி மக்களவை தொகுதி தேர்தலுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனுதாக்கல் தொடக்கம்

*வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர், எஸ்பி ஆய்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்பி கார்த்திகேயன் நேரடி ஆய்வு செய்தனர். இதையடுத்து வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, வேட்புமனுதாக்கல் இன்று தொடங்குகிறது. திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

மேலும், ஆரணி, திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகங்களில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வேட்புமனுக்களை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி, தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வாக்குச்சாவடிகள் அமைத்தல், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், ஆரணி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது. அதையொட்டி, திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று முன்தினம் கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் ஆய்வு நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணிகள் தொடர்பாக, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது, வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் அறைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அளித்த பேட்டி;

திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி முறையாக செய்யப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தோம். மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (கன்ட்ரோல் யூனிட்) வைக்கும் ஸ்ட்ராங் ரூமில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

மேலும், வாக்கு எண்ணும் போது, வேட்பாளர்கள் மற்றும் முகவர்களை எவ்வாறு அனுமதிப்பது அதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் நாளை (இன்று) தொடங்குகிறது. வேட்பாளர் மற்றும் 4 நபர்கள் என மொத்தம் 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மனுதாக்கல் நடைபெறும் இடங்களில் தேவையான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வங்கிகளில் சந்தேகத்துக்குரிய பண பரிமாற்றங்கள் குறித்து கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, எஸ்பி கார்த்திகேயன் கூறுகையில், மாவட்டம் முழுவதும் 131 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. தேர்தல் பார்வையாளர்கள் வந்ததும், அது குறித்து இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்றார்.ஆய்வின்போது, டிஆர்ஓ பிரியதர்ஷினி, ஆர்டிஓ மந்தாகினி, தாசில்தார் தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஊர்வலத்துக்கு தடை: திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகத்திலும், ஆரணி ஆர்டிஓ அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். இந்நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குவதால், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். மேலும், வேட்பாளருடன் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வேட்பாளர் மற்றும் அவருடன் 4 நபர்கள் என மொத்தம் 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

அதேபோல், ஊர்வலமாக செல்ல அனுமதியில்லை. வேட்புமனு தாக்கல் முழுவதும் வீடியோவில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. எனவே, வேட்புமனு தாக்கலின் முதல் நாளான இன்று, அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்யும் வாய்ப்பு இல்லை என தெரிகிறது. சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.வேட்புமனுதாக்கல் செய்ய வரும் 27ம் தேதி வரை அவகாசம் உள்ளது. ஆனாலும், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், மனுதாக்கலுக்கு மொத்தம் 6 நாட்கள் மட்டுமே உள்ளன. மனுக்கள் பரிசீலனை 28ம் தேதி நடைபெறும். 30ம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

The post திருவண்ணாமலை, ஆரணி மக்களவை தொகுதி தேர்தலுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனுதாக்கல் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Arani ,Lok Sabha ,SP ,Thiruvannamalai ,Collector ,Bhaskara Pandian ,Karthikeyan ,Lok ,Sabha ,Arani Lok Sabha ,
× RELATED விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது *...