×

ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

*வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வர அனுமதி

கடலூர் : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் இன்று முதல் துவங்குகிறது. இதற்காக கடலூர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் கடந்த 16ம் தேதி வெளியிட்டது. இதில் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று (20ம் தேதி) தொடங்குகிறது. இதை முன்னிட்டு அனைத்து கட்சிகள் சார்பில் வேட்பாளர் அறிவிப்பு மற்றும் தொகுதி அறிவிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மனு தாக்கல் இன்று முதல் துவங்குகிறது. காலை 11 முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வரும் 27ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள். 28ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். இதை தொடர்ந்து 30ம் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெறும் இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான மனு தாக்கல் செய்யப்படும் அரசு அலுவலகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியவை வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன் 5 பேர் மட்டுமே அலுவலகத்தில் உள்ளே அனுமதிக்கப்படுவர்.

மற்ற அனைவரும் 100 மீட்டருக்கு வெளியே நிற்க வேண்டும். வேட்பாளருடன் வருபவர்கள் மேள தாளங்கள், டிரம்ஸ் போன்றவை இசைக்க அனுமதி கிடையாது. மேலும் வேட்புமனு தாக்கலை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின் அடிப்படையில் வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் பின்பற்றிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore Collector ,Kottakshiar ,
× RELATED அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு: விஏஓ உட்பட இருவர் பணியிடை நீக்கம்