×

திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளர்கள் யார் என்பதில் உச்சகட்ட பரபரப்பு: வாக்காளர்கள், அரசியல் நோக்கர்கள் ஆர்வமுடன் எதிர்பார்ப்பு

திருவள்ளூர்: தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் 2008ல் உருவாக்கப்பட்ட தொகுதிதான் திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி. இந்த தொகுதியில் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் ஆதி திராவிடர்கள் அதிக எண்ணிக்கையிலும், அதற்கடுத்ததாக வன்னியர், முதலியார், சிறுபான்மையினர் ஆகியோரும் உள்ளனர். இந்த தொகுதி விவசாய மாவட்டமாக இருந்தாலும் கைத்தறி, நெசவு, மீன்பிடி ஆகிய தொழில் செய்பவர்களும் உள்ளனர்.

சென்னைக்கு அருகாமையில் உள்ள திருமழிசை, கும்மிடிப்பூண்டி, காக்களூர், காட்டுப்பள்ளி ஆகிய பகுதிகள் தொழிற்பேட்டை நிறைந்த பகுதியாகவும் இருப்பதால் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற பல்வேறு கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தொகுதி சீரமைப்புக்குப் பிறகு 2009ல் நடைபெற்ற 15வது நாடாளுமன்றத் தேர்தலில் 14 பேர் போட்டியிட்டனர்.

இதில் அதிமுக சார்பில் வேணுகோபால் 3,68,294 வாக்குகளும், திமுக சார்பில் போட்டியிட்ட காயத்திரி 3,36,621 வாக்குகளும் பெற்றதையடுத்து 31,673 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் வேணுகோபால் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 16வது நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேணுகோபால் 6,28,499 வாக்குகளும், திமுக கூட்டணியில் விசிக சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார் 3,05,069 வாக்குகளும் பெற்றதையடுத்து 3,23,430 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வேணுகோபால் மீண்டும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் 17வது நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கே.ஜெயக்குமார் 7,67,292 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட வேணுகோபால் 4,10,337 வாக்குகள் பெற்றதையடுத்து, 3,56,955 வாக்குகள் அதிகம் பெற்று திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.ஜெயக்குமார் வெற்றி பெற்றார். இதனையடுத்து அடுத்த மாதம் 19ம் தேதி 18வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு 6 தொகுதியில் உள்ள 2284 வாக்குச்சாவடி மையங்களில் 10,10,968 ஆண் வாக்காளர்களும், 10,46,755 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 375 என மொத்தம் 20,58,098 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அதன்படி கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள 330 வாக்குச்சாவடி மையங்களில் 1,32,777 ஆண் வாக்காளர்களும், 1,39,802 பெண் வாக்காளர்களும், 43 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,72,622 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

பொன்னேரி தொகுதியில் உள்ள 311 வாக்குச்சாவடி மையங்களில் 1,25,362 ஆண் வாக்காளர்களும், 1,31,296 பெண் வாக்காளர்களும், 29 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,56,687 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். திருவள்ளூர் தொகுதியில் உள்ள 296 வாக்குச்சாவடி மையங்களில் 1,27,343 ஆண் வாக்காளர்களும், 1,33,723 பெண் வாக்காளர்களும், 28 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,61,094 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

பூந்தமல்லி தொகுதியில் உள்ள 390 வாக்குச்சாவடி மையங்களில் 1,80,252 ஆண் வாக்காளர்களும், 1,87,626 பெண் வாக்காளர்களும், 69 இதர வாக்காளர்களும் என மொத்தம் 3,67,947 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஆவடி தொகுதியில் உள்ள 440 வாக்குச்சாவடி மையங்களில் 2,16,640 ஆண் வாக்காளர்களும், 2,22,079 பெண் வாக்காளர்களும், 94 இதர வாக்காளர்களும் என மொத்தம் 4,38,813 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மாதவரம் தொகுதியில் உள்ள 467 வாக்குச்சாவடி மையங்களில் 2,28,594 ஆண் வாக்காளர்களும், 2,32,229 பெண் வாக்காளர்களும், 112 இதர வாக்காளர்களும் என மொத்தம் 4,60,935 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியைப் பொறுத்தவரை ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 35,787 பேர் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரசுக்கே தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பதால் ஏற்கனவே வெற்றி பெற்ற வேட்பாளர் கே.ஜெயக்குமார் போட்டியிடுவாரா அல்லது காஞ்சிபுரம் முன்னாள் எம்பி விஸ்வநாதன், விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், விக்டரி எம்.ஜெயக்குமார் ஆகியோரும் போட்டியிட விருப்பம் தெரிவித்து டெல்லியில் முகாமிட்டு இருப்பதால் இவர்களில் யார் போட்டியிடுவார்கள் என திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.

இதேபோல் அதிமுக சார்பில் இந்த தொகுதியில் 2 முறை வெற்றி பெற்று ஒரு முறை தோல்வியுற்ற வேணுகோபால் போட்டியிடுவாரா அல்லது புதுமுகங்களாக இருக்கும் சிற்றம் சீனிவாசன், ராகேஷ், என்.எஸ்.ஜெ.பிரேம்நாத் ஆகியோரில் யாரையேனும் அறிமுகப்படுத்துவார்களா என அதிமுக நிர்வாகிகள் காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக வழக்கறிஞர் டி.தமிழ்மதி என்பவரை மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் பாஜ 3வது அணியாக இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதால் பாஜ கூட்டணி சார்பில் போட்டியிடுபவர் யார் என்றும், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் எத்தனை பேர் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என வாக்காளர்களும், அரசியல் நோக்கர்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருப்பதால் திருவள்ளூர் தொகுதி பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

பொது இடங்களில் 4 பேர் நின்று பேசினாலும், திருவள்ளூரில் கட்சி வேட்பாளர்கள் யார் என்பது குறித்த விவாதம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த முறை வெல்லப்போவது திமுக கூட்டணியா, அதிமுகவா அல்லது 3வது அணியாக உருவெடுத்துள்ள பாஜ கூட்டணியா என்பதை வேட்பாளர்கள் அறிவிப்புக்குப் பிறகே தெரியவரும்.

The post திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளர்கள் யார் என்பதில் உச்சகட்ட பரபரப்பு: வாக்காளர்கள், அரசியல் நோக்கர்கள் ஆர்வமுடன் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Assembly Constituencies of Thiruvallur ,Kummidipundi ,Bonneri ,Poonthamalli ,Avadi ,Madhavaram ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...