×

தமிழக – ஆந்திர எல்லையோர பகுதிகளில் 10 இடங்களில் கூடுதல் சோதனை சாவடி: மாவட்ட எஸ்பி தகவல்

திருவள்ளூர்: தமிழக-ஆந்திர எல்லையோர பகுதிகளில் 10 இடங்களில் கூடுதலாக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக-ஆந்திர எல்லையோர பகுதிகளில் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய 4 உட்கோட்டத்தில் உள்ள 22 காவல் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

இதில் தமிழக-ஆந்திர எல்லையோர பகுதிகளில் 10 இடங்களில் கூடுதலாக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் 1 சப்-இன்ஸ்பெக்டர், 2 தலைமைக் காவலர்கள் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்கவும், கள்ளச்சாராயம் மற்றும் மது வகைகளை கொண்டு வருவதை தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனைச்சாவடி ஆரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, பொதட்டூர்பேட்டை, பொன்பாடி உள்பட 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார். இதில் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், ஆந்திரா – தமிழ்நாடு எல்லையில் ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடி உள்ளது. இங்கு, தினமும் ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை போலீசார் சோதனை செய்வது வழக்கம்.

இந்நிலையில், அடுத்த மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தலும், ஆந்திர சட்டமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை போலீஸ் சோதனைச்சாவடியில், நேற்று ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களையும், தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்குச் செல்லும் வாகனங்களையும் ஊத்துக்கோட்டை போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர்.

* தேர்தல் அலுவலர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள பொன்பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை அலுவலர்கள் தணிக்கை மேற்கொள்வதை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது எந்த ஒரு வாகனத்தையும் சோதனை மேற்கொள்ளாமல் அனுப்பக்கூடாது, மேலும் எவ்வித சுணக்கமும் இல்லாமல் தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது திருத்தணி கோட்டாட்சியர் க.தீபா, வட்டாட்சியர் மதியழகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

* துப்பாக்கிகளை
ஒப்படைக்கவும்
மாவட்டத்தில் துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் தேர்தல் நடத்தை விதிகள்படி அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் பிரபு சங்கர் ஏற்கனவே அறிவித்திருந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் 77 பேர் துப்பாக்கி லைசென்ஸ் வைத்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளின்படி இதுவரை 36 பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ள 41 பேரும் துப்பாக்கியை அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

* ரூ.2.46 லட்சம் பறிமுதல்
நேற்றுமுன்தினம் இரவு நெமிலிச்சேரி அருகே வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரி பாலாஜி தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில் உரிய ஆவணமில்லாமல் ரூ.2.46 லட்சம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் மீஞ்சூர் பத்மாவதி நகரைச் சேர்ந்த சிப்புதீன் (23) என்பதும், தனியார் நிறுவனத்தில் செல்போன் விற்பனை செய்யும் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆவடி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை பெற்றுச் செல்லலாம் என அதிகாரிகள் சிப்புதீனிடம் தெரிவித்தனர்.

* 544 ரவுடிகள்
கண்காணிப்பு
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை கண்காணிக்க மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட ரவுடிகள் பட்டியலில் 569 பேர் உள்ளனர். அதில் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும், 19 பேர் பல்வேறு குற்ற வழக்குகளிலும் என 25 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 544 பேரையும் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் கண்காணித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post தமிழக – ஆந்திர எல்லையோர பகுதிகளில் 10 இடங்களில் கூடுதல் சோதனை சாவடி: மாவட்ட எஸ்பி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu - Andhra border ,District SP ,Tiruvallur ,Tamil Nadu-Andhra ,SP ,Srinivasa Perumal ,2024 parliamentary elections ,Tiruthani ,Oothukottai ,Kummidipoondi ,
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது