×

போலி மின்னஞ்சலை உருவாக்கி ரூ.43 லட்சம் உதிரி பாகங்களை விற்ற வாலிபர் கைது

ஆவடி: போலி மின்னஞ்சல் மூலம் ரூ.43 லட்சம் மதிப்புள்ள ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை கள்ள சந்தையில் விற்று மோசடியில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (48). இவர், கடந்த 15ம் தேதி அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நான் சொந்தமாக ஸ்டீல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை மணலி பகுதியில் நடத்தி வருகிறேன்.

எனக்கு ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொருட்களை சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்தனர். அதன்படி, ரூ.43 லட்சம் மதிப்புள்ள ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை எனது ஊழியர் மூலம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஓசூருக்கு லாரியில் அனுப்பி வைத்தேன். இதனிடையே, தனியார் நிறுவனத்தில் இருந்து துணை மேலாளரான அழகு சுந்தரம் என்பவர் என்னிடம் செல்போனில் பேசினார். நீங்கள் அனுப்பிய பொருட்களை பெற்றுக்கொண்டோம். இதற்கான பணத்தை விரைவில் அனுப்பி வைப்பதாக கூறினார்.

ஆனால், பணத்தை அனுப்பவில்லை. எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுதர வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். அதன்படி, ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அழகு சுந்தரம் என்ற பெயரில் போலி மின்னஞ்சல் முகவரி உருவாக்கியதும், லாரியில் கொண்டு சென்ற ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை பழைய இரும்புக் கடைகளுக்கு விற்று பணம் பெற்றதும் தெரியவந்தது.

போலி மின்னஞ்சல் மூலம் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை கள்ளச்சந்தையில் விற்று பண மோசடியில் ஈடுபட்டவர் மீஞ்சூர் பாலாஜி நகரைச் சேர்ந்த அப்துல்ரஹீம் (36) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post போலி மின்னஞ்சலை உருவாக்கி ரூ.43 லட்சம் உதிரி பாகங்களை விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Avadi ,Sridhar ,Meenjoor ,Ambattur ,
× RELATED செங்கல்பட்டு அருகே மின் மோட்டார் குழியில் விழுந்த பசுமாடு மீட்பு