×

விழுப்புரம் திரவுபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க அனுமதி

விழுப்புரம், மார்ச் 20: சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக மூடப்பட்டுள்ள திரவுபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்றம், பூசாரியை தவிர கோயிலுக்குள் எவரையும் அனுமதிக்க கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் குறிப்பிட்ட பிரிவினரை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம், ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கடந்த ஆண்டு கோயில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோயிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது. அப்போது, காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டரும், காவல் கண்காணிப்பாளரும், மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோயிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று தெரிவித்தனர்.

அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாத வகையில் நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் என்று தெரிவித்தார். அதேபோல, மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பூஜைகளுக்காக கோயில் திறக்கப்பட்டால் பாதுகாப்புக்கு காவல் துறையினர் பணியமர்த்தப்படுவர். எவரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனக் குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோயிலில் பூஜைகள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது. கோயிலில் பூஜைகள் செய்ய பூசாரி ஒருவரை இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் இணை ஆணையர் நியமிக்க வேண்டும். பூஜைகள் முடிந்ததும் கோயிலை பூட்டிவிட வேண்டும். எவரையும் கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது. பூஜைக்காக கோயில் திறக்கப்படும் போது எந்த சட்டம், ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கலாம். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அப்போது கோயிலை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்து விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post விழுப்புரம் திரவுபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Villupuram Dravupati ,Amman Temple ,Villupuram ,Madras High Court ,Draupadi Amman Temple ,Villupuram district ,Melpadi ,Villupuram Dravupati Amman temple ,
× RELATED காமாட்சி அம்மன் கோயிலில் ₹37.12 லட்சம் உண்டியல் காணிக்கை