×

100 மீட்டருக்குள் 2 வாகனம்தான் வர வேண்டும் வேட்பு மனு தாக்கலின்போது 5 பேருக்கு மட்டுமே அனுமதி: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி

சென்னை: வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்கள் மட்டும்தான் வர வேண்டும் என்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் அதற்கான அலுவலகங்களில் வேட்புமனுக்கள் பெறப்படும். அதன்படி, வடசென்னை தொகுதிக்கு பழைய வண்ணாரப்பேட்டை பேசின்பிரிட்ஜ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். தேர்தல் நடத்தும் அலுவலராக கட்டா ரவி தேஜாவும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக எஸ்.தனலிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் சென்னை தொகுதிக்கு அடையாறு, டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். தேர்தல் நடத்தும் அலுவலராக எம்.பி.அமித், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு சென்னை ஷெனாய்நகர் புல்லா அவென்யூவில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இங்கு தேர்தல் நடத்தும் அலுவலராக கே.ஜெ.பிரவீன்குமாரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக கவிதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

28ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். 30ம் தேதி வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள். வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதியும் நடைபெறும். வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் சிரமங்கள் ஏற்படும்.

இதை தவிர்க்கும் வகையில் அஞ்சல் வழியில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தை பெறுவதற்கு வசதியாக அவர்களது இல்லங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12டி மற்றும் வாக்காளர் பட்டியலுடன் நேரில் வருகை தருவார்கள். அவ்வாறு தங்களது இல்லங்களுக்கு வருகை தரும் போது உரிய படிவத்தில் தங்களது விருப்பத்தை படித்து பார்த்தோ அல்லது படிக்க கேட்டோ, ஆதாரங்கள் ஏதும் கோரும் பட்சத்தில் அதன் நகலை சமர்ப்பித்து, ஒப்பம் செய்து தங்களது ஒத்துழைப்பை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

* முதியவர்கள் அஞ்சல் வழியில் வாக்களிக்க 25ம் தேதிக்குள் படிவம் வழங்க வேண்டும்
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ, சென்னை நாடாளுமன்ற தொகுதிகளுக்குரிய தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலோ, தங்கள் பகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கோ சென்று வரும் 25ம் தேதிக்குள் படிவம் 12டியை இதற்கென பிரத்யேகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் உரிய ஒப்பம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

* 39,01,167 வாக்காளர்கள்
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த ஜனவரி 22ம் தேதி அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் வாக்காளர்களின் எண்ணிக்கை 39,01,167 ஆகும். மேற்கண்ட மொத்த வாக்காளர்களில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 11,369 நபர்களும், 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 63,751 நபர்களும் உள்ளதாக தெரிய வருகிறது.

* புகார் அளிக்கலாம்
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் அஞ்சல் வழியில் வாக்களிப்பது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் புகார்கள் இருக்கும் பட்சத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண்கள் 1950 மற்றும் 1800 425 7012 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.

The post 100 மீட்டருக்குள் 2 வாகனம்தான் வர வேண்டும் வேட்பு மனு தாக்கலின்போது 5 பேருக்கு மட்டுமே அனுமதி: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : District Election Officer ,Chennai ,Radhakrishnan ,Dinakaran ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...