×

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை நோய் பரவும் அபாயம்: பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மை வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பமான நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயில் அதிகரிக்க தொடங்கி விட்டது. இனிவரும் நாட்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மனித உடலின் சராசரி வெப்பநிலை 36.1 C (97 F) முதல் 37.2 C (99 F) ஆகும். சுற்றுப்புற வெப்பநிலை சராசரி வெப்பநிலையைவிட அதிகமாகும்போது வியர்வை, தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான வெப்பம் வெளியேறி உடல் சராசரி வெப்பநிலையை தாண்டுகிறது. கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும்போது உப்புச் சத்துப் பற்றாக்குறையும் நீர்ச்சத்துப் பற்றாக்குறையும் ஏற்படுகின்றன. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்படலாம்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தட்டம்மை (Measles), சின்னம்மை (Chicken Pox) போன்ற வெயில் (வெப்பம்) தொடர்பான நோய்கள் அதிக அளவில் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பொது மக்கள் வெயில் காலத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறியுறுத்தி உள்ளோம். சென்னையை பொறுத்த வரை சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் வெப்ப செயல் திட்டம் (heat action plan) உருவாக்கி வெயில்தொடர்பான நோய்களை கண்கணிக்க உத்தரவிட்டு உள்ளோம். மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு தேவையான குடிநீர் வைக்கவும், வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்க அறியுறுத்தி உள்ளோம். வெயில் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவரின் முழு தகவல்களை பொதுசுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

* கேரளாவில் 9 பேர் பலி

கேரளாவில் பிப்ரவரி மாதம் முதலே கடும் வெயில் வாட்டி வருகிறது. பிற்பகல் 3 மணி வரை யாரும் வெளியே வர வேண்டாம் என்று அரசு தெரிவித்துள்ளது. கடும் வெயில் தாக்கம் காரணமாக கேரள மாநிலத்தில் அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 75 நாட்களில், மாநிலத்தில் மொத்தம் 6744 பேருக்கு அம்மை நோய் வந்துள்ளது. ஒன்பது பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு, கேரள மாநிலத்தில் 26,000க்கும் மேற்பட்ட அம்மை நோய் பதிவாகியுள்ளது.

* பொதுமக்கள் செய்ய வேண்டியவை

பயணத்தின் போது குடிநீர் எடுத்து செல்ல வேண்டும், தேவையான அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும், செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளை குடிக்கலாம். திராட்சை, கிர்ணி பழம், தர்பூசணி பழங்கள் போன்ற நீர் சத்து உள்ள பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை அணிய வேண்டாம்.

* செய்யக் கூடாதது

மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக 64 வயதுக்கு மேல் உள்ள நபர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியில் வருவதை தடுக்க வேண்டும். குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சி, ரத்தக் குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகமாக்கிவிடுகிறது. ஆகவே கோடையில் ஐஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கைவிடுவது நல்லது. வெயில் காலத்தில் டீ அல்லது காபி அருந்தினால் அசிடிட்டி பிரச்னைகள் மற்றும் மலச்சிக்கல் போன்றவை உருவாகும்.

* அதிகமாக தாக்கும் நோய்கள்

பொன்னுக்கு வீங்கி நோயின் அறிகுறிகள் (Mumps): காது மடலுக்கு கீழ் உள்ள உமிழ் நீர் சுரப்பியை வைரஸ் தொற்று தாக்குவதால், தாடையின் இருபுறமும் வீக்கம் தோன்றுகிறது. மேலும் காய்ச்சல், கழுத்துவலி, தலைவலி, பசியின்மை, பலவீனம், சாப்பிடும் போதோ, அல்லது விழுங்கும் போதோ வலி ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

சின்னம்மை (Chicken Pox): உடலில் நீர் கட்டியைப்போன்ற சிறிய கொப்பளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர் கோர்த்துக் காணப்படும். கொப்பளங்களில் இருந்து நீர் வடியும். பின்னர் நீர் வறண்டு கொப்பளங்கள் உதிரும். இந்த நோய் குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், முதியவர்களுக்கும் எளிதில் பரவும்.

தட்டம்மை (Measles) : இந்நோய்க்கு மணல்வாரி அம்மை என்ற மற்றொரு பெயரும் உண்டு. காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், கண்ணில் நீர் வடிதல் அறிகுறிகளாகும். முகம் மற்றும் காதின் பின்பகுதிகளில் வேர்க்குரு போன்ற அறிகுறிகள் தோன்றி சிவப்பு புள்ளிகளாக உடல் முழுவதும் பரவி காணப்படும். கண்கள் சிவந்து வீக்கமாக காணப்படும். இரண்டு வாரங்களில் இந்த அம்மையும் தானாகவே சரியாகிவிடும்.

ஹீட் ஸ்ட்ரோக் (heat stroke) : உடல் வெப்பம் இயல்பை விட அதிகரித்து 104 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் போகும் போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. அதிக தாகம், வறண்ட தோல், உதடுகளில் பிளவு, நாக்கு வறட்சி ,பேசும்போது உளறல், வலிப்பு, தலை சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

The post வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை நோய் பரவும் அபாயம்: பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,public health department ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...