×

நாடாளுமன்ற தேர்தலில் விசிக சார்பில் சிதம்பரத்தில் திருமாவளவன், விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் விசிக சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறது. விழுப்புரம் வேட்பாளராக மீண்டும் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் போட்டியிடுகிறார். சிதம்பரத்தில் நான் மீண்டும் போட்டியிடுகிறேன். திமுக கூட்டணி 40 தொகுதியிலும் மாபெரும் வெற்றி பெறும். விசிக 2 தொகுதியில் வெற்றிபெற்று தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரத்தை பெறுவோம். விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் 2வது முறையும், சிதம்பரத்தில் நான் 6வது முறையும் போட்டியிடுகிறேன், அந்த தொகுதியில் மக்கள் இந்த முறையும் வெற்றி பெற வைத்து மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ராகுல் காந்தி மேற்கொண்ட 2 கட்ட பயணம் இந்த நாட்டை பாசிச சக்திகளிடம் இருந்து காப்பாற்றும் பயணம். 10 ஆண்டு காலம் பாஜ ஆட்சியில் அதானி, அம்பானி போன்றவர்கள் உலக பணக்காரர்களின் வரிசையில் முதல் 10 இடங்களை பெற்றிருக்கிறார்கள். பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. மக்களை சாதி பெயராலும், மதத்தின் பெயராலும் பிளவுபடுத்தி வருகின்றனர். இதனை இந்து மக்கள் உணர்ந்து உள்ளனர். எனவே அமைதி புரட்சி வர இருக்கிறது. மக்களுக்கும் சங்பரிவாரங்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் இந்த தேர்தல் என்று மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் காலூன்றி இங்கும் வட இந்திய மாநிலங்களை போன்ற வெறுப்பு அரசியலை விதைத்து மக்களை பிளவுபடுத்த பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். பெரியார், வள்ளுவர் சிலையை சேதப்படுத்த முயற்சிக்கிறார்கள். வள்ளலாரை சாயம் பூசி தங்களுக்கானவர் என உயர்த்திப் பிடிக்கப் பார்க்கிறார்கள். இவை எல்லாம் அறியாமையில் செய்கிற ஒன்றல்ல, திட்டமிட்டு செய்கிற முயற்சி. சாதி, மத உணர்வில் பாமகவும், பாஜவும் திளைத்துக் கிடக்கிறது. ஒரே கூட்டணியாக இருந்த பாமக, பாஜ, அதிமுகவினர் சிதறி போனார்கள். ஓபிசி, எம்பிசி மக்களை பாமக கைவிட்டாலும் விசிக கைவிடாது என்றார்.

தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விசிக வேட்பாளர்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன், தி.க. தலைவர் கி.வீரமணி ஆகியோரை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

The post நாடாளுமன்ற தேர்தலில் விசிக சார்பில் சிதம்பரத்தில் திருமாவளவன், விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Chidambaram ,Ravikumar ,Villupuram ,Visika ,CHENNAI ,DMK ,Vsika ,Ambedkar Thidal ,Ashok Nagar, Chennai ,
× RELATED சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விறு விறுப்பான வாக்குப்பதிவு