×

நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு பிரசுரம் அச்சிடுபவர்கள் அச்சடிக்கப்பட்ட விவரங்களை முன்பக்கத்தில் குறிப்பிட வேண்டும்: அச்சக உரிமையாளர்கள் கூட்டத்தில் அறிவுரை


செங்கல்பட்டு: நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், செய்து அறிக்கைகள் ஆகியவைகளில் அச்சிடுபவர்கள் மற்றும்வெளியிடுபர்கள் பெயர் மற்றும் அச்சடிக்கப்பட்ட நகல்களில் எண்ணிக்கை ஆகியவற்றை முன்பக்கத்தில் குறிப்பிட வேண்டும் என அச்சக உரிமையாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்து. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தேர்தல், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது தொடர்பான கூட்டம் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், அனைத்து திருமண மண்டப உரிமையாளர்கள், அடகு கடை உரிமையாளர்கள், வர்த்தக சபை மற்றும் வணிக நிறுவனங்கள், அச்சக உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் உரிமையாளர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், இயங்கிவரும் அச்சகங்களின் உரிமையாளர்கள் தங்களது அச்சகத்தில் அச்சடிக்கப்படும் தேர்தல் சம்பந்தமான நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு பிரசுரம். செய்தி அறிக்கைகள் ஆகியவைகளில், அச்சிடுபவர் மற்றும் வெளியிடுபவர் பெயர் மற்றும் முகவரி முகப்பு பகுதியில் அச்சிடப்பட வேண்டும்.

மேலும், எத்தனை எண்ணிக்கையில் நகல்கள் அச்சடிக்கப்பட்டன என்ற விவரங்களும் தெளிவாக தெரியும் வகையில் முன்பக்கத்தில் அச்சடிக்கப்பட வேண்டும். அச்சிடுபவரை அடையாளம் காணுகின்ற வகையில் அதனை வெளியிடுபவர் உறுதிமொழி ஒன்றை அளித்து அதில் அவர் கையொப்பமிட்டு அவர் நன்கு அறிந்த இரு நபர்களால் சான்றளிக்கப்பட்டு, அதனை இரட்டை படிவத்தில் அச்சிடுபவருக்கு அளிக்கப்பட வேண்டும்.

தேர்தல் சம்பந்தமான, அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு பிரசுரம், விளம்பரங்கள், செய்தி அறிக்கைகள் ஆகியவை 10 நகல்கள் மற்றும் பிரசுரம் செய்பவரின் உறுதிமொழி ஆகியவைகளுடன் அச்சடிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த நடைமுறையை தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி வரையில் கடைபிடிக்க வேண்டும்.

மேற்கண்ட சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1953ம் பிரிவு 127 அ(4)-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆறு மாத காலம் வரை சிறைத் தண்டனையும் அல்லது அபராதம் ரூ.2000 வரையிலோ அல்லது இரண்டும் விதிக்கப்படும். விளம்பரங்கள் அச்சு ஊடகத்தில் இருந்து வேறொரு பெயரிலும் சில நிறுவனங்களின் பெயரிலும் வெளியிடப்படுகின்றன என தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தேர்தல் காலங்களில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும், அச்சு ஊடகத்தில் முக்கியமாக செய்தித் தாள்களில் வெளியிடப்படுகின்ற விளம்பரங்கள் அச்சிடுவதை தவிர்க்கப்பட வேண்டும். இது போன்று வேட்பாளரின் அனுமதியின்றி விளம்பரம் செய்யப்பட்டிருப்பின் இந்திய தண்டனைச் சட்டம் 1860, பிரிவு 171ஐ மீறியதாக விளம்பர வெளியீட்டாளர் மீது வழக்கு தொடர வழிவகை உள்ளது.

மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்றநிலையில் பொதுக்கூட்டம் விழாக்கள் போன்ற நிகழ்வுகளின்போது வாக்காளர்களுக்கு மறைமுகமாக அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு டோக்கன், அடையாள வில்லைகள் மற்றும் இதர வகைகளை கையாண்டு வருவதை எந்த ஒரு உரிமையாளரும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மீறினால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

தங்கும் விடுதி உரிமையாளர்கள் தேர்தல் நடைபெறும் காலங்களில் உரிய அடையாள அட்டைகளை சரிபார்க்க வேண்டும். மேலும் ஆதார் (அல்லது) புகைப்பட அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை நகல்களை பெற்ற பின்னரே தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நாளன்று வெளி மாவட்டம் அல்லது வெளிமாநிலத்திலிருந்து தேர்தல் தொடர்பாக வந்து தங்கி இருப்பவர்களை வெளியேறச் செய்ய வேண்டும்.

குழுவாக தங்க அனுமதிக்கப்படுபவர்கள் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஆயுதங்கள், பட்டாசு பொருட்கள் வைத்திருக்க அனுமதிக்க கூடாது. மேற்சொன்ன பொருள் தொடர்பாக தேவைப்படின் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.  மேற்கண்ட நிகழ்வுகள் செயல்பாடுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

மேற்சொன்ன விதிமுறைகளின்படி, நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நேர்மையாகவும், சுமுகமாகவும் நடைபெற மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* அடகு வைத்த நகைகள்
அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள் வேட்பாளர்கள் முகவர்களால் மொத்தமாக மீளத்திருப்பப்பட்டு வாக்காளர்களுக்கு திருப்பி வழங்கப்படுவதை தவிர்க்க வேண்டும். மொத்தமாக அடகு நகைகளை திருப்ப எவரேனும் முற்படின் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நேரில் வந்தாலோ, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலத்தில் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் தங்களது நிறுவனத்தை அணுகி வெவ்வேறு அடகு நகைகளை திருப்ப முற்பட்டாலோ மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 800-425-7088 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது அடகு வைக்கப்படும் நகைகள் சந்தேகத்திற்கிடமான வகையில் மீளத்திருப்பப்படும்போது அவை குறித்த விவரங்களை உடனடியாக அருகாமையிலுள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

* கூட்டம் நடத்த தடை
திருமண மண்டபம், தங்கும் விடுதி மற்றும் கூட்ட அரங்க உரிமையாளரும் வெளியூரிலிருந்து கூட்டமாக வந்து தங்குவதற்கு அனுமதி வழங்கக்கூடாது. திருமணக்கூடம், தங்கும் விடுதி மற்றும் கூட்ட அரங்கில் திருமணம் மற்றும் சுப நிகழ்வுகள் தவிர வேறு எவ்வித அரசியல் தொடர்புடைய கூட்டங்கள் நடைபெற பதிவு செய்யப்பட்டால் அதன் விவரத்தை முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட வேண்டும். சுப நிகழ்வுகள் என்ற பெயரில் மக்களை கூட்டி பரிசு பொருட்கள் வழங்குவது. புடவை வேட்டிகள் வழங்குவது மற்றும் பணம் கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக அறியப்பட்டால் அதனை உடனடியாக தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

* உணவு வழங்க தடை
திருமண மண்டபங்களில் சுப நிகழ்வுகள் என்ற பெயரில் மக்களைக் கூட்டி உணவு பொட்டலங்கள் மற்றும் சாப்பாடு பந்தி பரிமாறுதல் போன்ற ஏதும் நடைபெறக் கூடாது. அவ்வாறு நடைபெற்றால் அது குறித்த தகவலை உடன் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும். திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள் மற்றும் உருவங்கள் பொரித்த தட்டிகள், கட்டவுட்டுகள், பேனர்கள், அலங்கார வளைவுகள் ஆகியவற்றினை வைத்து வாக்குகள் சேகரித்தல் கூடாது.

The post நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு பிரசுரம் அச்சிடுபவர்கள் அச்சடிக்கப்பட்ட விவரங்களை முன்பக்கத்தில் குறிப்பிட வேண்டும்: அச்சக உரிமையாளர்கள் கூட்டத்தில் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!