×
Saravana Stores

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இடையீட்டு மனுக்கள் மீது ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை!!

டெல்லி : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இடையீட்டு மனுக்கள் மீது ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து ஆவணங்கள் எதுவும் இல்லாமல் வரும் முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் வகையில், கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய அரசு குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வந்தது. நாடாளுமன்றத்திலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சட்டம் கொண்டுவரப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 11ம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்ககு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி உள்ளிட்டோர் வழக்குகளையும் தொடர்ந்தனர்.

இந்த நிலையில், (சிஏஏ) (CAA) தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட 236 மனுக்களை ஒருங்கிணைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரணை நடத்தியது. அப்போது மனுதாரர்கள் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்,”குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பாணையை நிறுத்திவைக்க வேண்டும்.சி.ஏ.ஏ. சட்டம் நிறைவேற்றப்பட்ட 3 ஆண்டுகள் 3 மாதங்களுக்குப் பிறகு தற்போது அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. சி.ஏ.ஏ. சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் என்ன அவசரம். இப்போது குடியுரிமை வழங்கும் பணிகள் தொடங்கினால் பின்னர் அதனை திரும்பப் பெற இயலாது.சி.ஏ.ஏ. வழக்கு முடியும் வரை குடியுரிமை சட்டத்தை செயல்படுத்தும் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். சி.ஏ.ஏ.சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணை முடிவு வரை சி.ஏ.ஏ. அறிவிப்பாணையை ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது?,”இவ்வாறு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சிஏஏவுக்கு எதிரான இடையீட்டு மனுக்கள் மீது பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ஆஜரான ஒன்றிய அரசு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி 20 இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, இதற்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரினார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், அவகாசம் வேண்டும் என்றால் புதிய சட்டத்தின் கீழ் யாருக்கும் குடியுரிமை வழங்க மாட்டோம் என ஒன்றிய அரசு உறுதி அளிக்கட்டும் என தெரிவித்தார், இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி,”குடியுரிமை சட்டத்தை எதிர்த்த 236 மனுக்களில் எத்தனை மனுக்களுக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளோம்?. உத்தரவிடாத மனுக்களுக்கும் உத்தரவிட வேண்டியுள்ளது.இடையீட்டு மனுக்களுக்கு 3 வாரத்திற்குள் பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடுகிறோம். ஒன்றிய அரசின் பதில் மனுவுக்கு மனுதாரர்கள் விளக்க மனுவை ஏப்ரல் 2ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரிக்கப்படும், “இவ்வாறு தெரிவித்தார்.

The post குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இடையீட்டு மனுக்கள் மீது ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,EU Government ,Delhi ,Union Government ,Pakistan ,Bangladesh ,Afghanistan ,Dinakaran ,
× RELATED பூதாகரமாகும் மியூல் வங்கிக் கணக்கு...