×

தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் ஆத்தூர் புதிய ஆற்றுப் பாலத்தில் ஆபத்தை உணராமல் கடக்கும் வாகனங்கள்

ஆறுமுகநேரி: தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையின் முக்கிய போக்குவரத்து நடைபெறும் தாமிரபரணியின் பெரிய பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாலத்தின் நடுப்பகுதியின் தூண் இறங்கியது. இதனால் தற்போது போக்குவரத்து நடைபெறாமல் எந்தவித பணியும் நடைபெறாமல் உள்ளது. இதனை உடனடியாக சீரமைக்கவேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில், தூத்துக்குடி – திருச்செந்தூர் போக்குவரத்தின் உயிர்நாடியான தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 70 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட பழைய பாலம் உள்ளது. பல புயல், வெள்ளம் வந்த போதும் இன்று வரை கம்பீரமாக காட்சியளித்து தங்குதடையின்றி போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இப்பாலம் சிறியதாக இருந்ததாலும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது பாலத்தின் மேல் தண்ணீர் செல்வதாலும், அதன் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாலம் கட்டப்பட்டது. தற்போது கடந்த டிசம்பர் மாதம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத பெரும் கனமழை வெள்ளத்தின் போது முக்காணி தாமிரபரணி ஆற்றின் சிறிய பாலத்தின் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தடுப்புக் கம்பிகள் வெள்ளத்தில் சின்னாபின்னமாகியது. ஆனாலும் பாலம் கம்பீரமாக நின்று இன்று வரை போக்குவரத்தை சீர் செய்து வருகிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலத்தில் நடுப்பகுதியில் உள்ள ஒரு தூண் கனரக வாகனம் சென்ற போது பாரம் தாங்காமல் இரண்டு அடி இறங்கி விட்டது. இதனால் வெள்ளத்திற்கு பிறகு இப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது பழைய சிறு பாலத்திலேயே இருபுறமும் போக்குவரத்து நடைபெறுவதால் போக்குவரத்து மெதுவாக செல்கிறது. சில நேரங்களில் எதிரேதிரே இரண்டு வாகனங்கள் வரும்போது ஒரு வாகனங்கள் நின்று ஒன்றுக்கொன்று விலகி தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதில் இரண்டு சக்கரவாகனங்கள் மற்றும் பாதசாரிகளும் அந்த சிறிய பாலத்திலேயே செல்லவேண்டியது உள்ளது. இதனால் தற்போது விபத்து நடப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் சேதமடைந்த உயர்மட்ட பாலத்தில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பாலத்தின் அபாய நிலையை உணராமல் ஆட்டோ, கார், பைக் போன்ற வாகனங்களில் பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். எனவே பெரிய அபாயம் ஏதும் நிகழும் முன் இந்த பாலத்தில் போக்குவரத்தை தடை செய்வதோடு, போர்கால அடிப்படையில் புதிய பாலத்தை சீர்செய்துதர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

வேகமாகச் செல்லும் வாகனங்கள்
தற்போது முக்காணி தாமிரபரணி ஆற்றின் சேதமடைந்த உயர்மட்ட பாலத்தில் இருபுறம் உள்ள நடைபாதையில் காலை மற்றும் மாலை வேளைகளில் அப்பகுதி ஆண்கள் மற்றும் பெண்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைத்திருந்தும் தற்போது பைக், ஆட்டோ இந்த பாலத்தில் வழியாக வேகமாக சென்று வருகின்றது. இப்பாலத்தின் உறுதி தன்மையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, மத்திபகுதியில் 2 அடி இறங்கிய தூண்கள் மேலும் இறங்காமலும், வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாலத்தின் மின்விளக்கு எரியாமல் இருளில் முழ்கியுள்ளது. மீண்டும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

The post தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் ஆத்தூர் புதிய ஆற்றுப் பாலத்தில் ஆபத்தை உணராமல் கடக்கும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Atur New River Bridge ,Thutukudi — ,Thiruchendur Road ,Arumuganeri ,Thamiraparani Bridge ,Thutukkudi-Tiruchendur road ,bridge ,Atur ,Thoothukudi ,Tiruchendur road ,Dinakaran ,
× RELATED சாகுபுரம் அருகே வளைவு பாலத்தில் அபாய பள்ளம் தற்காலிகமாக சீரமைப்பு