×

ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் மீண்டும் வெற்றி: வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து

மாஸ்கோ: ரஷ்யாவில் அதிபர் தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தற்போதையே அதிபர் புடின் மீண்டும் போட்டியிட்டார். அவருக்கு எதிராக எதிர்கட்சிகள் பலவும் போட்டியிட்டன. ரஷ்யா – உக்ரைன் போர், எதிர்கட்சி தலைவரான நவால்னி சிறையில் இறந்தது, எதிர்கட்சிகள் அதிபருக்கு எதிராக போராட்டம் என புடினுக்கு எதிர்பலைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து வெள்ளியன்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் நடந்த வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்தது.

இதனையடுத்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. புடின் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணையம் தேர்தலில் புடின் வெற்றி பெற்றதாக அறிவித்தது. அவர் 87.29 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஹோண்டுராஸ், நிகரகுவா, வெனிசுலா நாட்டு தலைவர்கள் புதினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த 1999ம் ஆண்டு முதல் அதிபர் அல்லது பிரதமராக புதின் ரஷ்யாவை வழிநடத்தி வருகிறார்.

* நவால்னி விடுவிக்க நினைத்தேன்
ரஷ்யாவில் தீவிரவாத குற்றச்சாட்டில் 19 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த எதிர்கட்சி தலைவரான நவால்னி கடந்த மாதம் திடீரென உயிரிழந்தார். அவரது மறைவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதல் முறையாக நவால்னி மரணம் குறித்து அதிபர் புடின் குறித்து கூறுகையில், ‘‘நவால்னி உயிரிழப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது இல்லை. நவால்னியை கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கும் யோசனையை நான் ஆதரித்தேன். என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும். அதற்கு உங்களால் எதுவும் செய்ய முடியாது. இது வாழ்க்கை. ” என்றார்.

* புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘ரஷ்யாவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாடிமிர் புடினுக்கு அன்பான வாழ்த்துக்கள். வரும் ஆண்டுகளில் இந்தியா-ரஷ்யா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதற்காக எதிர்நோக்கியுள்ளேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் மீண்டும் வெற்றி: வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Putin ,Election ,Moscow ,Russia ,President ,Ukraine ,Navalny ,presidential election ,Dinakaran ,
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...