×

மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியின் சுவர் விளம்பரம், போஸ்டர், பேனர்கள் அகற்றம்: மண்டலக்குழு தலைவர், கவுன்சிலர் அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல்

திருவள்ளூர்: நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் 16ம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில், பொது இடங்களில் உள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சி போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு, கொடிக்கம்பங்கள், பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணியும் துவங்கியுள்ளது.

இந்நிலையில் மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் த.வ.சுபாஷினி தலைமையில் சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நகரப் பகுதியில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களை கிழித்தும், கொடிக்கம்பங்கள், பிளக்ஸ் பேனர்களை அகற்றியும், சுவர் விளம்பரங்களை அழிப்பதும், பேருந்து நிழற்குடைகளை புடவையால் மறைப்பதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், பெரும்பாலான இடங்களில் இன்னும் விதிமுறை பின்பற்றப்படாமல், அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், விளம்பரங்கள், போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் ஆக்கிரமித்திருப்பதையும் அகற்றிட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவொற்றியூர்: திருவொற்றியூர், மணலி, மாதவரம் போன்ற அனைத்து மண்டலங்களில் உள்ள மண்டலக்குழு தலைவர் அலுவலகம், கவுன்சிலர் அலுவலகம் ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் 5ம் தேதி முதல் மீண்டும் இந்த அலுவலகங்கள் செயல்பாட்டுக்கு வரும். இதனிடையே மதில்சுவர்கள், குடிநீர் தொட்டிகள் ஆகியவற்றில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி போஸ்டர்கள், விளம்பரங்களை மறைக்கும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பேருந்து நிறுத்த நிழற்குடைகளில் இடம் பெற்றுள்ள அரசு சாதனை விளம்பரங்களையும் காகிதம் மற்றும் வெள்ளை பேனர்களை வைத்து மறைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல், சுவர்களில் எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை சுண்ணாம்பு மற்றும் பெயின்ட் அடித்து மறைக்கப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு அதிகாரிகள் வாகனங்களில் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத பணம் மற்றும் சந்தேகப்படும்படியான பொருட்கள் இருக்கிறதா என்பது குறித்தும் அவர்கள் சோதனை செய்தனர்.

The post மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியின் சுவர் விளம்பரம், போஸ்டர், பேனர்கள் அகற்றம்: மண்டலக்குழு தலைவர், கவுன்சிலர் அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல் appeared first on Dinakaran.

Tags : Zonal Committee Chairman ,Thiruvallur ,Tiruvallur ,Zonal Committee Chairman, ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் அருகே தொழிற்சாலை வாகனங்கள் மோதி 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம்