×

பல ஆண்டுகளாக தொடரும் இருதரப்பு பிரச்னை நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அட்டைகள் ஒப்படைப்பு: காஞ்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: ஆர்.என் கண்டிகையில், இருதரப்பு கிறிஸ்தவர்களிடையே பல ஆண்டுகளாக தொடரும் சாதிய அடக்குமுறை பிரச்னையால், நாடாளுமன்ற தேர்தலை புறகணித்து, தலித் கிறிஸ்தவர்கள் வாக்காளர் அட்டைகளை ஒப்படைக்க காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வருகை புரிந்ததால் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆர்.என்.கண்டிகை கிராமத்தில் இருதரப்பு கிறிஸ்தவர்கள் பலர் வசித்து வருகின்றனர்.

இதில், ஒரு தரப்பு கிறிஸ்தவர்களான தலித் கிறிஸ்தவர்கள் மீது, பல்வேறு வகையில் தீண்டாமை சாதிய அடக்குமுறையை இக்கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள மற்றொரு தரப்பு கிறிஸ்தவர்களான நாயுடு கிறிஸ்தவர்கள் ஏவி வருகின்றதாகவும், குறிப்பாக மாதா கோயிலில் தனியாக அமர வைப்பது, கோயிலுக்கு செல்லும்போது செருப்பு அணிய கூடாது, கோயிலில் எங்கள் கை, கால்கள் மேல்பட கூடாது என பல்வேறு தீண்டாமையை கடந்த 190 ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றதாக தலித் கிறிஸ்தவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதை எதிர்த்து பல வகையான போராட்டங்களை நடத்தியும், எங்களை கோயிலில் நுழைய விடாமல் தடுத்து வருவது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்ததின்பேரில், மாவட்ட வருவாய் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்பி, வருவாய் துறை, காவல் துறை மற்றும் நாயுடுக்கள், ஆதிதிராவிடர், அருந்ததியர் என்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும், அதில் ஒருசில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டி வழக்கு தொடர்ந்து, உயர்நீதிமன்றம் அனைத்து தரப்பும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்திட உத்தரவிட்டநிலையில், ஒருசில சட்ட பாதுகாப்பு கிடைத்தநிலையில் இன்று வரை தனி சுடுகாடு, தனி கோயில், தனி திருவிழா என தொடர்கின்றதாக ஒரு தரப்பு கிறிஸ்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மாவ ட்ட கலெக்டரிடம், மாவ ட்ட காவல் துறையிடமும் எங்கள் கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள நாயுடு கிறிஸ்தவர்கள் தவறான தகவல்கள், கடிதங்களை என பரப்பி வருகின்றனர். எங்கள் பகுதியில் நிலவும் தீண்டாமை சாதிய பாகுபாட்டை போக்கவும், தொடர்ந்து நாங்கள் பயமின்றி அச்சமின்றி சராசரி வாழ்க்கையை வாழ்ந்திட விசாரணை செய்து சாதியவாதிகள் மீது, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுத்து தலித் மக்களாகிய எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்தவர்கள், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணியிடம், வரும் நாடாளுமன்ற தேர்தலை புறகணிப்பதாகவும், ஆகையால் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வருகை புரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் நடத்திய சுமூக பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தேர்தல் முடிந்த பிறகு சுமூக முடிவெடுக்கப்படும் என்று அளித்த உத்தரவாதத்தின்பேரில், வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்ட தங்களது வாக்காளர் அடையாளத்தை பெற்றுக்கொண்டு அவர்கள் கலைந்து சென்றனர். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 100க்கும் மேற்பட்ட கிருஸ்துவர்கள் ஒன்று கூடி நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து, வாக்காளர் அட்டையை திரும்ப ஒப்படைக்க வந்ததால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகமே பரபரப்புடன் காணப்பட்டது.

The post பல ஆண்டுகளாக தொடரும் இருதரப்பு பிரச்னை நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அட்டைகள் ஒப்படைப்பு: காஞ்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchi Collector ,Kanchipuram ,RN ,Dalit ,Christians ,Kanchipuram Collector ,Kanchipuram district ,Uttramerur ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...