×

தேர்தல் பத்திரங்களின் எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தோடு விளையாட வேண்டாம் என எச்சரிக்கை

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவகாரத்தில் அதன் எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும் வியாழக்கிழமைக்குள் எஸ்.பி.ஐ வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தோடு விளையாட வேண்டாம் என்று எச்சரித்தனர். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி வழங்கும் திட்டம் கடந்த 2018ல் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் நன்கொடை அளிக்கும் நிறுவனத்தின் பெயர் வெளிவராது, அதே போல் அதை பெறும் கட்சியின் பெயரும் வெளிப்படையாக தெரியாது. இந்த திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம கடந்த மாதம் 16ம் தேதி தீர்ப்பளித்தது.

மேலும் மார்ச் 6ம் தேதிக்குள் இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள அனைத்து பங்களிப்புகளின் விவரங்களையும் எஸ்.பி.ஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் வழங்க வேண்டும். இதையடுத்து மார்ச் 13ம் தேதிக்குள் அனைத்து விவரங்களும் இணையதளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர். ஆனால், பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாமல் நான்கு மாதம் கூடுதல் அவகாசம் கேட்டு இருந்தது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடந்த 12ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய எஸ்.பி.ஐ வங்கிக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த வியாழக்கிழமை தேர்தல் பத்திர விவரங்களை இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், தேர்தல் பத்திர எண் உள்ளிட்ட விவரங்கள் இல்லை. இதனால், எந்த கட்சி யார் நிதி கொடுத்தார்கள் என்ற விவரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இது பற்றி நேற்றைக்குள் விளக்கம் அளிக்க எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று உத்தரவிட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது எஸ்.பி.ஐ வங்கி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே,’எந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகை யார் மூலமாக வந்தது என்பது உள்ளிட்ட தரவுகளை ஆய்வு செய்து வருகிறோம். தேர்தல் பத்திரம் என்பது போலியானது கிடையாது. உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையிலும், அதன் புரிதலின்படியும் தான் தரவுகளை வெளியிட்டுள்ளோம். இருப்பினும் சில விபரங்களை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. அதனையும் நாங்கள் தயார் செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

இதையடுத்து அப்போது குறுகிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,’இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் கடந்த முறை வழங்கப்பட்ட உத்தரவின் போது, தேர்தல் பத்திர எண் உட்பட அனைத்து விபரங்களையும் வெளியிட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். ஆனால் எஸ்பிஐ தரப்பில் அந்த உத்தரவை மதித்ததாக தெரியவில்லை. குறிப்பாக எஸ்பிஐ தரப்பு நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றத்தோடு விளையாடுவது போல் உள்ளது. இதனை நாங்கள் எச்சரிக்கையாகவே கூறுகிறோம். நீங்கள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக முழு விவரத்தையும் தாக்கல் செய்யும் வரையில், நாங்களும் இந்த வழக்கை முடித்து வைக்கப்போவது கிடையாது என்று காட்டமாக தெரிவித்தார்.

இதையடுத்து ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,’தேர்தல் பத்திரங்கள் என்பது கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் கொள்கை ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு. ஆனால் அது தற்போது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. அதனை உச்ச நீதிமன்றமும் அறியும். அப்போது மீண்டும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி,’உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் ஒரு இறுதி உத்தரவு பிறப்பிக்கும் என்று எஸ்பிஐ காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவே இறுதியானதாக நினைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய தவறிய எஸ்பிஐ வங்கியின் செயல்பாடுகள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்,’வாங்கப்பட்ட தேர்தல் பத்திரத்திற்கும், பணமாக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களுக்கும் வித்தியாசம் உள்ளது. யார் எவ்வளவு கொடுத்துள்ளார்கள் என்ற விபரத்தை ஏமாற்றி எஸ்.பி.ஐ வங்கி தரப்பில் சமர்பிக்கப்பட்டுள்ளது என கூறினர். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,’தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் சில மாற்றங்கள் கேட்ட எஸ்பிஐ தரப்பின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்கிறோம். ஏனெனில் அந்த இடைக்கால மனுவை விசாரித்தால், முன்னதாக பிரதான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை பாதிக்கும்.

இதில் தேர்தல் பத்திரங்களின் சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் வரும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் எஸ்பிஐ வங்கி தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து முழு விபரங்களும் கிடைக்கப் பெற்ற உடனே, தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும். மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவை இறுதி உத்தரவாக எஸ்.பி.ஐ தரப்பு எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

* உச்ச நீதிமன்ற உத்தரவை எஸ்பிஐ மதித்ததாக தெரியவில்லை.
* உச்ச நீதிமன்றத்தோடு விளையாட வேண்டாம் என்று எஸ்.பிஐக்கு நீதிபதிகள் கண்டனம்.
* தேர்தல் பத்திரங்களின் சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் வரும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் எஸ்பிஐ வங்கி தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க உத்தரவு.
* ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் சில மாற்றங்கள் கேட்ட எஸ்பிஐ தரப்பின் இடைக்கால மனு தள்ளுபடி.

The post தேர்தல் பத்திரங்களின் எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தோடு விளையாட வேண்டாம் என எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : SBI ,Supreme Court ,NEW DELHI ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு