×

திமுக ஒன்றிய செயலாளர் கொலை வழக்கு வண்டலூர் ஊராட்சி தலைவி கைது: கணவன் கொலைக்கு பழி தீர்த்ததாக வாக்குமூலம்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த வண்டலூர், வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வி.எஸ்.ஆராமுதன் (55). இவர், கடந்த 2001ம் முதல் 2011ம் ஆண்டு வரை வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராகவும், தற்போது காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராகவும், துணை தலைவராகவும் பதிவு வகித்து வந்தார். இவரை, கடந்த மாதம் 29ம்தேதி இரவு அவரது வீட்டின் அருகே வண்டலூர் – வாலாஜாபாத் சாலையோரம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் செய்துகொண்டு, தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த 15 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி அவரை வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலைய போலீசார், வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தநிலையில், கொலை நடந்த மறுநாளே ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில், வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி விரிவு, டி.எஸ்.நகரை சேர்ந்த முனீஸ்வரன் (22), மண்ணிவாக்கம், கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்த சத்தியசீலன் (20), திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சம்பத்குமார் (20), அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20), திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சட்ட கல்லூரி மாணவன் உட்பட 5 பேர் சரணடைந்தனர். இதனையடுத்து, கடந்த 4ம்தேதி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கம், அறிஞர் அண்ணா காலனியை சேர்ந்த கனகா (எ) கனகராஜ் (38), அதே பகுதியை சேர்ந்த அருண்ராஜ் (34), ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (32), அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26) ஆகிய 4 பேரும் சரணடைந்தனர்.

சரணடைந்த 9 பேரையும் கடந்த 11ம்தேதி ஓட்டேரி போலீசார், காவலில் எடுத்து விசாரணை நடத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர். அந்த விசாரணையில் கிடைத்த தகவல்களின்பேரில், இந்த கொலை வழக்கு தொடர்பாக கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம், விநாயகபுரம் 4வது தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (21), வண்டலூரை சேர்ந்த முகிலன் (21), வாணியம்பாடியை சேர்ந்த தீபக்ஸ்ரீராம் (21), வண்டலூர் அடுத்த கண்டிகையை சேர்ந்த சேதுராமன் (21) ஆகிய 4 பேரை ஓட்டேரி போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து விசாரணை நடத்தி, அவர்களையும் சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியதில், திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் கொலைக்கு முக்கிய காரணம் வண்டலூர் ஊராட்சி தலைவி முத்தமிழ்செல்வி விஜயராஜ் (50) மற்றும் அவரது கார் ஓட்டுநரும், வண்டலூர் ஊராட்சி ஊழியருமான துரைராஜ் (37) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரையும் நேற்று கைது செய்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2016ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 18ம்தேதி முத்தமிழ்செல்வியின் கணவர் விஜயராஜ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதில், ஆராமுதனுக்கும் தொடர்பு இருந்ததாகவும், இதன் பின்னர் வண்டலூர் ஊராட்சி தலைவராக முத்தமிழ்செல்வி பதவி ஏற்ற பின்னர் ஆராமுதனுக்கும், முத்தமிழ்செல்விக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல்கள் ஏற்பட்டு வந்ததாகவும், தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக தன்னை ஆராமுதன் வேலை செய்ய விடாமல் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தி வந்தார் என்று கருதினார்.

ஆராமுதனை கொலை செய்ய திட்டமிட்டு அதற்கு தன்னுடைய கார் ஓட்டுநர் துரைராஜ் மூலம், விஜயராஜின் ஆதரவாளர்களான கொலையாளிகளுக்கு, முத்தமிழ்செல்வி பணம் கொடுத்து ஆராமுதனை கொலை செய்து கணவரின் கொலைக்கு பழிக்கு பழி தீர்த்துக் கொண்டது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, போலீசார் கைது செய்யப்பட்ட 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post திமுக ஒன்றிய செயலாளர் கொலை வழக்கு வண்டலூர் ஊராட்சி தலைவி கைது: கணவன் கொலைக்கு பழி தீர்த்ததாக வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Vandalur ,panchayat ,DMK ,Tambaram ,Aramudhan ,Vemphuli Amman Koil Street ,vice president ,Kattangolatur North Union ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம்,...