×

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சிக் கொடிகள் தயாரிக்க குட்டி ஜப்பானில் குவியுது ஆர்டர்

சிவகாசி: மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் கொடிகள், சின்னங்கள், தலைவர்களின் படங்கள், முகமூடிகள் தயாரிப்பு ஜரூராக நடந்து வருகின்றன. ஆர்டர்கள் குவிவதால் அச்சக உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதனுடன் 4 மாநிலங்களுக்கான தேர்தல், நாடு முழுவதும் 26 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பாரதீய ஜனதாவில் இணைந்ததால், அவர் வெற்றி பெற்ற கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்குகிறது.

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் மார்ச் 27. வேட்பு மனுக்கள் பரிசீலனை 28ம் தேதி நடக்கிறது. மார்ச் 30ம் தெதி வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்படுகிறது. இதனால், நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்திற்கு தயாராகி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமை தாங்கும் இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி மதுரை வேட்பாளராக சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியின் வேட்பாளராக சச்சிதனாந்தமும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பலமான கூட்டணி அமைப்போம் என அறிவித்து வரும் அதிமுகவும், பாஜவும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். தேசிய அளவில் இந்தியா கூட்டணி பல மாநிலங்களில் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வெற்றிகரமாக தேர்தல் பணியை தொடங்கியுள்ளன. ராகுல்காந்தியும் தனது பாதயாத்திரையை மும்பையில் நேற்று மாலை நிறைவு செய்தார்.

அப்போது பிரமாண்ட கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் ஒன்றியத்தில் பாஜகவை வீழ்த்த உறுதியேற்றனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் குட்டி ஜப்பான் என போற்றப்படும் சிவகாசியில் மக்களவை தேர்தலையொட்டி கட்சிக்கொடிகள், சின்னங்கள், கட்சி தலைவர்களின் படங்கள், முகமூடிகள் தயாரிக்கும் பணி ஜோராக நடந்து வருகிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் முகம் கொண்ட முகமூடிகள் ஏராளமாக தயாரிக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் கொடிகளுக்குத் தடை இருப்பதால் துணிக்கொடி, பேப்பர் கொடி மற்றும் அட்டைக் கொடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் வரும் வாரங்களில் கட்சிக்கொடி விற்பனை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அச்சக உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இரவு, பகலாக தயாரிப்பு

அச்சக உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘சிவகாசியில் உள்ள அச்சகங்கள் அனைத்திலும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ என அனைத்து கட்சி கொடிகளும் வேறுபாடின்றி ஒரே இடத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல; வெளி மாநிலங்களிலும் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருவதால் அச்சகங்கள் இரவு பகலாக முழுவீச்சில் இயங்கி வருகின்றன. துணி கொடிகள், கட்சி சின்னங்கள், தலைவர்களின் படங்கள், தொப்பிகள் ஆகியவை தயாரிக்க சிவகாசியில் உள்ள அச்சகங்களுக்கு ஆர்டர்களை அரசியல் கட்சிகள் வழங்கி வருகின்றன. கட்சிகள் பிரசார பணிகளில் ஈடுபடும் போது, இவற்றின் விற்பனை நன்றாக இருக்கும். நடப்பாண்டு புது வரவாக கட்சித் தலைவர்கள் வரும்போது வரவேற்கும் விதமாக வெல்கம் போர்டும், நெக் போர்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

The post மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சிக் கொடிகள் தயாரிக்க குட்டி ஜப்பானில் குவியுது ஆர்டர் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Japan ,Sivakasi ,Tamil Nadu ,Little Japan ,India ,18th Parliament ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...