×

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி உள்ளிட்ட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி : ஒப்பந்தம் கையெழுத்தானது!!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 நாடாளுமன்ற தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. மீதியுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங். மேலிட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் சந்திப்பு மேற்கொண்டனர். இதையடுத்து, தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் பின்வருமாறு..

1. திருவள்ளூர் (தனி)
2. கடலூர்
3.மயிலாடுதுறை
4. சிவகங்கை
5.திருநெல்வேலி
6.கிருஷ்ணகிரி
7.கரூர்
8. விருதுநகர்
9. கன்னியாகுமரி
10. புதுச்சேரி

இதில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட புதுச்சேரி, கன்னியாகுமரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கரூர் தொகுதிகளை திமுக இம்முறை ஒதுக்கியுள்ளது. மேலும் கடந்த முறை போட்டியிட்ட திருச்சி, ஆரணி, தேனி தொகுதிகளுக்கு பதிலாக கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய 3 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் கேட்ட தொகுதிகளை வழங்கி உள்ளனர். எங்களுக்கு சாதகமான 10 தொகுதிகளை கேட்டு பெற்று இருக்கிறோம். இரண்டு அல்லது 3 நாட்களில் 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அடுத்த செய்தியாளர் சந்திப்பில் 40 தொகுதியையும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற இனிப்பான செய்தியோடு சந்திக்கிறேன்,”இவ்வாறு கூறினார்.

The post மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி உள்ளிட்ட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி : ஒப்பந்தம் கையெழுத்தானது!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Cuddalore ,Mayiladuthura ,Tirunelveli ,Lok Sabha ,Chennai ,Dimuka ,Union of India Muslim Party ,Ramanathapuram ,Kongunadu People's National Party ,Liberation Leopards Party ,Dinakaran ,
× RELATED பயணியிடம் நகை பறித்த வாலிபர் சிறையிலடைப்பு