சென்னை: அதிமுக – பாமக கூட்டணி உறுதி செய்யப்பட உள்ள நிலையில் இன்று காலை பாமக அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடக்கிறது. இதையடுத்து திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான தொகுதிகளையும் ஒதுக்கி கொடுத்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் என்று தொடக்கம் முதலே கூறி வருகிறார். ஒரு சில லெட்டர்பேடு கட்சிகளை தவிர, வேறு எந்த கட்சியும் அதிமுக கூட்டணியில் இணைந்ததாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
தேமுதிகவுடன் அதிமுக 3கட்ட பேச்சுவார்த்ைத நடத்தியும், இதுவரை தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படவில்லை. இதனிடையே அதிமுக-பாமக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நேற்று மாலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி வீட்டில் நடந்தது. அப்போது சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள், எடப்பாடி பழனிசாமியுடன் சுமார் ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்அதிமுக கூட்டணியில் பாமக இணைவதை உறுதி செய்துள்ளது. பாமக விரும்பும் 7 மக்களவைத் தொகுதிகள், 1 மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக – பாமக கூட்டணி உறுதி செய்யப்பட உள்ள நிலையில் இன்று காலை பாமக அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
ஆலோசனைக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். அதிமுக- பாமக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமதாஸ் தலைமையில், பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post அதிமுக – பாமக கூட்டணி உறுதி செய்யப்பட உள்ள நிலையில் இன்று காலை பாமக அவசர ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.