×

தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் கைது: நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசு, மீனவக்குடும்பங்கள் கொந்தளிப்பு

மண்டபம்: ராமேஸ்வரத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையிடனர் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறைபிடிக்கப்பட்ட 21 மீனவர்களையும் வரும் 27ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இரவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர்.

அதில் இருந்த படகு உரிமையாளர் ஆரோக்கிய சுகந்தன், மீனவர்கள் சாமுவேல், அந்தோணி, பூமிநாதன், சுப்பிரமணி, அடிமை யோசுவா, இருளாண்டி, சுந்தரபாண்டி, சீனிப்பாண்டி, பாலுச்சாமி, சக்திவேல் உட்பட 21 மீனவர்களையும் கைது செய்தனர். இரண்டு படகுகளுடன் மீனவர்கள் அனைவரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு நேற்று கொண்டு சென்றனர். அங்கு இலங்கை கடற்படை உயர் அதிகாரிகள் விசாரணை செய்து யாழ்ப்பாணம் கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர்.

அவர்கள் விசாரணைக்கு பிறகு, எல்லைதாண்டி மீன்பிடிக்க வந்ததாக வழக்குப்பதிந்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி கஜநாதிபாலன், மீனவர்களை வரும் மார்ச் 27ம் தேதி வரை சிறை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் 21 மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இலங்கை சிறையில் தற்போது உள்ள தமிழக மீனவர்கள் ஐந்து பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்;

இலங்கை கடற்படையின் சிறைபிடிப்பு நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில், மேலும் 21 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம் மீனவர் விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதிக்கும் ஒன்றிய அரசின் செயலால் இப்பகுதி மீனவக் குடும்பங்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை கடற்படை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தவேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 10ம் தேதி புதுக்கோட்டையை சேர்ந்த 7 மீனவர்களும், கடந்த 15ம் தேதி காரைக்காலை சேர்ந்த 15 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் ஏற்கனவே கைது செய்துள்ள நிலையில் தற்போது ராமேஸ்வரத்தை சேர்ந்த 21 மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒரே மாத்தத்தில் 43 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் கைது: நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசு, மீனவக்குடும்பங்கள் கொந்தளிப்பு appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lanka Navy ,Union government ,Mandapam ,Sri Lankan Navy ,
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்