×

மக்களை பிளவுபடுத்தும் பாஜ விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும்: மும்பையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு


* ராகுல், கார்கே, சரத்பவார், உத்தவ், தேஜஸ்வி உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

மும்பை: மக்களை பிளவுபடுத்தும் ஒன்றிய பாஜ அரசு விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும் என்று மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 2022ம் ஆண்டு தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்த யாத்திரை 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் முடிந்தது.

நாட்டின் தெற்கில் தொடங்கி வடக்கு நோக்கி 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக சுமார் 136 நாட்கள் நடைபெற்ற இந்த யாத்திரை, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களிடையே புத்துணர்ச்சியை உண்டாக்கியது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நீதிப்பயணம்’ என்ற பெயரில் தனது 2ம் கட்ட நடைபயணத்தை தொடங்கினார். கலவரம் மூண்ட மணிப்பூர் மாநிலத்தில் இருந்து இந்த யாத்திரை தொடங்கியது. பாஜ ஆளும் மாநிலங்களில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.

எனினும், அந்த தடைகளை தகர்த்து வெற்றிகரமாக நடைபயணத்தை தொடர்ந்தார் ராகுல் காந்தி. நாட்டின் கிழக்கில் தொடங்கி மேற்கு நோக்கி 14 மாநிலங்களின் 85 மாவட்டங்கள் வழியாக நியாய யாத்திரையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதன் படி மணிப்பூரில் தொடங்கி நாகாலாந்து, அஸ்ஸாம், சத்தீஸ்கர், உ.பி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் வழியாக நடைபயணத்தை தொடர்ந்தார். இந்நிலையில், 12ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பார் மாவட்டத்துக்கு வந்தடைந்தார்.

பின்னர் துலே, மாலேகாவ், நாசிக் வந்த அவர், நாசிக்கில் உள்ள புகழ்பெற்ற காலாராம் கோயிலிலும், திரிம்பகேஷ்வரர் கோயிலிலும் பிரார்த்தனை மேற்கொண்டார். அதன் பிறகு, தானே மாவட்டம் பிவண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அங்கிருந்து மும்பை நோக்கி பயணம் செய்த அவர், நேற்று மும்பையில் யாத்திரையை நிறைவு செய்தார். மும்பையில் நடைபெற்ற ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயண பொதுக்கூட்டம் சிவாஜி பார்க்கில் நடந்தது.

இதில், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களான தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ், காஷ்மீர் முன்னாள் முதலவர் பரூக் அப்துல்லா, மதிமுக தலைவர் வைகோ, டி.ஆர்.பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு வாழ்த்துகளைக் கூறுவதற்காக வந்திருக்கிறேன். கன்னியாகுமரியில் அவரது இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கி வைத்த பெருமிதத்துடன் இங்கு நிற்கிறேன். உங்கள் பயணம் இன்று மும்பையை அடைந்துள்ளது. விரைவில் அது டெல்லியை எட்டும். இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும். ராகுல் காந்தி எங்கு சென்றாலும் பெரும் திருவிழாவைப் போல அந்த இடம் காட்சியளிக்கிறது. அப்படியொரு வரவேற்பையும் அன்பையும் மக்கள் அவர் மீது பொழிகிறார்கள்.

இந்தப் பயணத்தினிடையே அவர் பல இடர்களைப் பாஜ அரசின் மூலம் எதிர்கொண்டார். அவரது பயணத்துக்கு அனுமதி மறுக்க என்னென்னவோ காரணங்களைச் சொல்லிப் பார்த்தார்கள். தடைகளை மீறி ராகுல் காந்தி தன் பயணத்தைத் தொடர்ந்தார். ராகுல் காந்திக்கு கூடிய மக்கள் பெருந்திரள் பா.ஜ.வைத் தூக்கமிழக்கச் செய்தது. அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தார்கள். ஆனால் அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து முழங்கினார். இந்தப் பயணம் ராகுல் காந்தி என்ற தனிமனிதரின் பயணம் இல்லை.

இது இந்தியாவுக்கான பயணம். அதனால்தான் இது இந்திய ஒற்றுமை நியாயப் பயணம். இந்தியாவுக்கு இப்போது தேவை ஒற்றுமைதான். மக்களைப் பிளவுபடுத்தும் பாஜ விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும். கடந்த பத்தாண்டுகளில் மோடி செய்தது இரண்டே இரண்டுதான். ஒன்று வெளிநாட்டுப் பயணங்கள். மற்றொன்று பொய்ப் பிரசாரம். பா.ஜ.வை நாம் இப்போதே நிறுத்தி ஆகவேண்டும். அதுதான் நம் இலக்கு. இந்தியா கூட்டணியை நாம் உருவாக்கிய நாளில் இருந்து, இந்தியா என்ற சொல்லையே பா.ஜ தவிர்க்கத் தொடங்கிவிட்டது.

அந்த அளவுக்கு அச்சத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் பிரதமர் மோடி நம் கூட்டணி குறித்து அவதூறு செய்து வருகிறார். இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணி என்கிறார். ஆனால், ஊழலில் ஊறிய கட்சி பா.ஜ.தான் என்பதைத் தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்தி விட்டது. 8,000 கோடி ரூபாயைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டியது யார்? இது பா.ஜ.வின் நவீன ஊழல். இப்படிப்பட்ட பிரதமர் ஊழல் குறித்து வாய்திறக்கலாமா? தனது தோல்விகளையும் ஊழல்களையும் திசைதிருப்பவே நம் மீது மோடி குற்றம்சாட்டுகிறார்.

நாம் மக்களுக்கு நன்மை செய்ய அரசியலுக்கு வந்தவர்கள். கேளிக்கைக்காக அன்று. இந்தியாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சகோதரர் ராகுல் காந்தி பயணித்திருக்கிறார். பா.ஜ..வால் சீரழிக்கப்பட்ட நம் இந்தியாவை மீட்பதற்கான பயணம் இது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இனி பா.ஜ.வை வீழ்த்துவது ஒன்றே நமது இலக்கு. பா.ஜ.வை விடப் பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை.

அவர்களிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாயப் பயணத்தின் உண்மையான வெற்றி என்பது பா.ஜ.வை வீழ்த்துவதில்தான் அடங்கியிருக்கிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம் டெல்லியைக் கைப்பற்றி, அனைத்துத் தரப்பினருக்குமான, மதச்சார்பற்ற, உண்மையான கூட்டாட்சி அரசை அமைப்பதில் நிறைவுற வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். இந்தியாவே எழுக. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கி வைத்த பெருமிதத்துடன் இங்கு நிற்கிறேன்.

* உங்கள் பயணம் இன்று மும்பையை அடைந்துள்ளது. விரைவில் அது டெல்லியை எட்டும்.

* இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும்.

The post மக்களை பிளவுபடுத்தும் பாஜ விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும்: மும்பையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BAJA ,MUMBAI ,K. Stalin ,INDIA ALLIANCE ,RAKUL ,KARKE ,SARATHBWAR ,UTAV ,TEJASVI ,UNIFIED BAJA GOVERNMENT ,MINISTER ,president ,Congress ,Bahaja ,Chief Minister MLA ,MLA ,
× RELATED தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும்...