- தி.க தலைவர் வீரமணி
- தண்டாயர்பேட்டை
- டிகே தலைவர்
- வீரமணி
- கோதண்டராமன் தெரு (42 ஏ) வட்டம், வண்ணாரப்பட், சென்னை
- டாக்டர் கலைஞர் நூற்றாண்டு கட்டிடம்
- தந்தை பெரியார் ஆய்வு மையம்
- D.K.
- ஜனாதிபதி
தண்டையார்பேட்டை: காவிகளுக்கு இந்த மண்ணில் இடம் இல்லை என வண்ணாரப்பேட்டையில் நடந்த விழாவில், தி.க. தலைவர் வீரமணி கூறியுள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெரு (42அ) வட்டத்தில், டாக்டர் கலைஞர் நூற்றாண்டு கட்டிடம், தந்தை பெரியார் படிப்பகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் வண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு நடைபெற்றது. வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். ஆர்.கே.நகர் எம்எல்ஏ எபிநேசர் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்துகொண்டு, புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர். பின்னர், கூட்டத்தில் வீரமணி பேசியதாவது: திராவிட மாடல் அரசின் சிறப்பை கூறும் பிரசார திருவிழாவாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. தேர்தல் வரவுள்ள காரணத்தால் வடமாநிலத்தில் கவனம் செலுத்திய மோடி தற்போது தமிழகத்திற்கு 6 முறை வந்துவிட்டார். அவர் எத்தனை முறை வந்தாலும் காவிகளுக்கு இந்த மண்ணில் இடமில்லை. இது பகுத்தறிவு மண்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் அரசு பொறுப் பேற்றவுடன் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமை திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டம், இப்படி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தேர்தல் வருகிறது என்றவுடன் கேஸ், பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளனர். தேர்தல் முடிந்தால் மீண்டும் விலையை உயர்த்துவார்கள். நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்தார்கள். தேர்தல் பத்திரம் மூலம் பல்வேறு நிறுவனங்களை மிரட்டி 6 ஆயிரம் கோடி நிதி பெற்றுள்ளனர். பிஜேபி ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இந்தியாவிற்கே எடுத்து காட்டாக தமிழ்நாட்டின் ஆட்சி உள்ளது. இது திராவிட மாடல் அரசின் சாதனையாகும். இந்தியா கூட்டணியை ஒன்று சேர்த்தது மு.க.ஸ்டாலின்தான். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற பொதுமக்களான நீங்கள் முடிவு செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ஆர்.கே.நகர் தேர்தல் பொறுப்பாளர் நம்பிராஜன், சென்னை மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், வழக்கறிஞர் மருது கணேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்.இளவரசன், இலக்கிய அணி மாவட்ட தலைவர் சண்முகம், பகுதி பிரதிநிதி வழக்கறிஞர் ரூபசங்கர், வட்ட துணை செயலாளர் மணி, ஜனார்த்தனன் மற்றும் திமுகவினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
The post காவிகளுக்கு இந்த மண்ணில் இடம் இல்லை: தி.க. தலைவர் வீரமணி பேச்சு appeared first on Dinakaran.