×

வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்: விலை குறைவால் உற்பத்தியாளர்கள் வேதனை

வேதாரண்யம்: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. குறைந்த அளவு விலை போவதால் உற்பத்தியாள்கள் வேதனை அடைந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் ஆண்டுதோறும் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுக்கு சராசரி 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். ஜனவரி மாதம் துவங்கும் இந்த உற்பத்தி செப்டம்பர் வரை மொத்தம் 9 மாதங்கள் மட்டுமே நடைபெறும். அதன்பிறகு மழைகாலம் துவங்கிவிடும் என்பதால் உப்பு உற்பத்தி நிறுத்தப்படும்.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இரவு, பகலாக உப்பு உற்பத்தி செய்யும் பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக தினந்தோறும் 50 லாரிகளிகளில் உப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், மாதம் ஒருமுறை 50 ரயில் வேகன்களிலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு காலம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உற்பத்தி இலக்கைகூட எட்ட முடியவில்லை.

இந்தாண்டு இலக்கை தாண்டி உற்பத்தி இருக்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் உப்பு உற்பத்திகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது உப்பு உற்பத்தி அதிகமாக நடைபெறுவதால் ஒரு டன் தற்போது ரூ.900க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு டன் உப்பு உற்பத்தி செய்ய 600 ரூபாய் வரை செலவாகிறது. லாபம் அதிகமாக இல்லாவிட்டாலும் அதிகளவு உற்பத்தி நடைபெறுவதால் உப்பு உற்பத்தியாளர்கள், தயார் செய்யப்பட்ட உப்பை தார்பார் மற்றும் பனை ஓலைகள் கொண்டு மூடி பாதுகாக்க தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு டன் உப்பு ரூ.3000 வரை விற்ற நிலையில் தற்போது ரூ.900 குறைந்து விற்பனை நடைபெறுவது உப்பு உற்பத்தியாளர்களை கவலை அடைய செய்துள்ளது.

The post வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்: விலை குறைவால் உற்பத்தியாளர்கள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Nagapattinam district ,Agasthianpalli ,Katinlvayal ,Kodiakkadu ,Dinakaran ,
× RELATED பெண் போலீசுடன் தனிமையில் இருந்த...