×

மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது

நாமக்கல் மார்ச் 17: நாமக்கல் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையொட்டி, 48 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மாலை தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி புகைப்படங்களை அகற்றுதல், தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு பணிகள் குறித்தும், தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளை கலெக்டர் உமா பேசினார்.

இதனைத் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ள நிலையான கண்காணிப்பு குழு பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழுவின் வாகனங்களை கலெக்டர் ெதாடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கலெக்டர் உமா, நிருபர்களிடம் கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அமைந்துள்ளது. இங்கு அடுத்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 18 பறக்கும் படை குழு, 18 நிலையான கண்காணிப்பு குழு, 12 வீடியோ கண்காணிப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து கண்காணிப்பார்கள்.

பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களுக்கு 1800425721 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணுக்கு, புகார் அளிக்கலாம். இதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ₹50 ஆயிரம் வரை மட்டுமே, எந்தவித கட்டுப்பாடு இன்றி எடுத்துச் செல்லலாம். தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், 1660 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 68 வாக்கு சாவடி மையங்கள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பர பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகை பலகைகளை உடனடியாக அவர்களை அப்புற படுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவற்றை அரசு அலுவலர்கள் அகற்றி விடுவார்கள். எனவே தேர்தல் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றி தேர்தலை அமைதியாக நடத்த அரசியல் கட்சியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டம் அமைதியான மாவட்டமாகும். அதேபோல, நாடாளுமன்ற தேர்தல் பணிகளையும் அமைதியாக நடத்த, அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.அப்போது, மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal District ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...