×

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் வணிகர்கள் ரூ.2 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதி வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையரிடம் விக்கிரமராஜா கோரிக்கை

சென்னை: சென்னை, தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவை நேரில் சந்தித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மற்றும் முக்கிய நிர்வாகிகள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதை தேர்தல் அதிகாரிகள் தவறான கண்ணோட்டத்தில் கையாள்வதன் காரணமாக அடித்தட்டு, நடுத்தர வணிகர்கள் தான் பெரும்பாலும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால் பொருள், பண இழப்பு, மன உளைச்சல், வாழ்வாதார இழப்புக்கு வணிகர்கள் உள்ளாக்கப்படுகிறார்கள். தற்போது இருக்கின்ற பண வீக்கம், பொருளாதார மந்தநிலை அடிப்படையில், ரொக்க கொள்முதலுக்கு குறைந்தது ரூ.2லட்சம் வரை வணிகர்கள் எடுத்துச்செல்ல அனுமதி அளித்திட வேண்டுகிறோம்.

காய்கறி மற்றும் பழம் வியாபாரம் செய்கின்ற சிறு வியாபாரிகள் கூட குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. வணிகர்கள் உரிய விற்பனை பட்டியலுடன் பொருட்களை கொண்டுசெல்லும் வாகனங்களை தடுத்து கைப்பற்றுவதையும், தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தி, காலதாமதம் செய்வதையும் தவிர்த்திட வேண்டி, அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி, பொருட்கள் விநியோகத்திலும், மக்கள் சேவையிலும் வணிகர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவண்ணம் தேர்தல் நடைமுறைகளை அமல்படுத்திட வேண்டும். வணிகர் தின மாநில மாநாடு மே 5ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுபணிகளில் எவ்வித குறுக்கீடும் செய்திடாமல் ஒத்துழைப்பு அளித்திட அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் வணிகர்கள் ரூ.2 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதி வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையரிடம் விக்கிரமராஜா கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Wickramaraja ,Chief Election Commissioner ,CHENNAI ,Tamil Nadu Chamber of Commerce ,President ,Satya Pratha Chagu ,Dinakaran ,
× RELATED தேர்தல் விதிமுறை தளர்வு வணிகத்தை...