×

அரியலூர் பெண்ணிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுவனின் சிகிச்சைக்கு உடனே உதவ ஏற்பாடு: ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் மூலம் அதிரடி நடவடிக்கை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், பயனாளிகளை தொடர்பு கொண்டு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளை கேட்டறியும் புதுமையான திட்டமாக ‘நீங்கள் நலமா’ என்ற புதிய திட்டத்தை கடந்த 6ம் தேதி தொடங்கி வைத்து, பயனாளிகளுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். அதன் தொடர்ச்சியாக நேற்று முதல்வர் அரியலூர் மாவட்டம், கோவிந்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்த ராதிகா என்ற பயனாளியிடம் காணொலிக் காட்சி வாயிலாக தொடர்பு கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலமாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், இந்த மாதத்திற்கான உரிமைத்தொகை கிடைத்ததா என்பது குறித்தும், உரிமைத்தொகை வங்கி கணக்குகளின் வாயிலாக கிடைக்கப்பெறுகிறதா, இது தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என்றும் கேட்டறிந்தார்.

முதல்வரின் கேள்விக்கு பதில் அளித்த ராதிகா, “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் முறையாக வழங்கப்படுவதாகவும், இந்த மாதத்திற்கான தொகை தனது வங்கி கணக்கில் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மகளிர் பயணத்தின் மூலம்தான் தாங்கள் அதிக பயணங்கள் மேற்கொள்வதாகவும் இத்திட்டம் பயனுள்ளதாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கலைஞர் உரிமைத் தொகையை தனது மகனின் மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்ததுடன், தனது 7 வயது மகன் மதன்ராஜ் ரத்தப்புற்று நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், சிகிச்சைக்கு போதிய பணமில்லாததால் முதல்வர் உதவ வேண்டும்” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரிடம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட சுகாதாரத் துறை மருத்துவக்குழு அவரது இல்லத்திற்கு சென்று சிறுவன் மதன்ராஜுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதுடன், ராதிகாவிடம், முதல்வர் உத்தரவின்படி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சி தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார். தொடர்ந்து, ராதிகா தனக்கு தையல் பயிற்சி நன்றாக தெரியும் என்றும், இலவச தையல் இயந்திரம் வழங்கினால் மகனின் மருத்துவ தேவைகளை நிறைவேற்ற உதவியாக இருக்கும் என்றதன் பேரில் அவரது விண்ணப்பம் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் பிற்பட்டோர் நலத்துறையின் வாயிலாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

 

The post அரியலூர் பெண்ணிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுவனின் சிகிச்சைக்கு உடனே உதவ ஏற்பாடு: ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் மூலம் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,K. Stalin ,Chennai ,Mudhalvar ,Mu. ,Dinakaran ,
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமற்ற...