×
Saravana Stores

டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்: அஷ்வினுக்கு பாராட்டு விழா


சென்னை: டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த இந்திய சுழல் நட்சத்திரம் ஆர்.அஷ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அஷ்வின் பல்வேறு சாதனைகளை படைத்தார். ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்டில் தனது 500வது விக்கெட்டை வீழ்த்தினார். தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களில் 100 டெஸ்ட் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இதையொட்டி அஷ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) சார்பில் சேப்பாக்கம் எம்சிஏ அரங்க வளாகத்தில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.டிஎன்சிஏ தலைவர் அசோக் சிகாமணி வரவேற்று பேசினார். தொடர்ந்து பேசிய பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, ‘அஷ்வின் உள்ளூர் ஆட்டமானாலும், தேசிய அணிக்கான ஆட்டமானாலும் சர்வதேச தரத்தில் தனது பங்களிப்பை அளிப்பார்.

இன்றும் அதே பாணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். நான் சந்தித்த சிறந்த ஸ்பின்னர்களில் அஷ்வினும் ஒருவர்’ என்றார். ஐசிசி முன்னாள் தலைவர் என் சீனிவாசன்: அஷ்வின் எனது மகன் போன்றவர். அவரை அருகில் வைத்துக்கொண்டு நிறைய பேசுவது சிரமமாக உள்ளது. அவர் அருகில் இல்லாவிட்டால் அவர் குறித்து 100க்கும் மேற்பட்ட விஷயங்களை என்னால் சரளமாகப் பேச முடியும். அதற்கு வயது தடையாக இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் இன்று 500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இனி ஒரு தமிழ் வீரர் ஏன் தென்னிந்தியாளவில் இருந்து ஒரு வீரர் இவ்வளவு விக்கெட் வீழ்த்தி சாதனை படைப்பது அரிதாகவே இருக்கும். அஷ்வின் எப்போதும் அணிக்கான வீரன். நல்லவன். இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும்.

முன்னாள் கேப்டன் கே.காந்த்: ஒரு தமிழனாக அஷ்வின் சாதனைகளுக்காக பெருமைப்படுகிறேன். கிறிஸ் கேலுக்கு பந்துவீச வேண்டுமென்றால் மற்ற வீரர்கள் அச்சமடைவார்கள். ஆனால், அஷ்வின் பந்துவீசுகிறார் என்றால் கிறிஸ் கேல் பயப்படுவார். அத்தகைய திறமை படைத்த வீரர் தான் அஷ்வின். 2023 ஐசிசி டெஸ்ட் பைனலில் அவர் களமிறங்கி இருந்தால் இந்தியா கோப்பையை வென்றிருக்கும். இதை சொல்வதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இன்னும் பல்வேறு சாதனைகளை படைக்கும் சூழல் அவருக்கு அமைய வாழ்த்துகிறேன். முன்னாள் கேப்டன் கும்ப்ளே: எனக்கும் அஷ்வினுக்கும் விளையாட்டில் மட்டுமல்ல, விளையாட்டை தொடங்கியதில் படிப்பில் என பல ஒற்றுமைகள் உள்ளன. ஒரே மாதிரியான சம்பவங்கள் நடந்துள்ளன. இப்போது 500 விக்கெட் வீழ்த்திய அணியிலும் என்னுடன் அவர் இணைந்துள்ளார். 500 விக்கெட் எடுப்பது என்பது விளையாட்டான விஷயம் அல்ல. அதனை சாதித்திருப்பது பாராட்டுக்குரியது. அவர் மேலும் பல்வேறு சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.

ஆர்.அஷ்வின்: இன்று இந்த இடத்தில் நான் நின்று கொண்டிருக்கிறேன் என்றால், அதற்கு எனது பள்ளிக்காலம் முதல் உதவிய, வழிகாட்டிய பலர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த அரங்கில் பல்வேறு நிகழ்வுகள் என் வாழ்க்கையுடன் பெரிதும் தொடர்புடையவை. நான் இறந்தாலும் எனது ஆன்மா இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும். நிகழ்ச்சியில் அஷ்வினுக்கு வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது. கும்ப்ளே 500 தங்கக் காசுகளால் 500 என்ற எண் பொறிக்கப்பட்ட நினைவுப் பரிசையும், என்.சீனிவாசன் ரூ1 கோடிக்கான காசோலையையும் வழங்கினர். நிகழ்ச்சியில் சிஎஸ்கே தலைமை செயல் அலுவலர் காசி விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

The post டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்: அஷ்வினுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Ashwin ,Chennai ,Tamil Nadu Cricket Association ,R. Ashwin ,England ,Rajkot… ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது