×

பரோட்டா சாப்பிட்ட தொழிலாளி மூச்சு திணறி பரிதாப சாவு: ஆவடி அருகே சோகம்

ஆவடி: ஆவடி அருகே தனியார் உணவகத்தில் பரோட்டா சாப்பிட்ட தொழிலாளிக்கு கடும் மூச்சு திணறல் ஏற்பட்டதில் பரிதாபமாக இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆவடி அருகே பாலவேடு, கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு (43). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒரு தனியார் லேத் பட்டறை கம்பெனியில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு மனைவி மஞ்சி (38) மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். வழியில், ஒரு தனியார் உணவகத்தில் சாப்பிட சென்றுள்ளார். அங்கு சால்னாவில் பரோட்டாவை ஊறவைத்து அதிகளவில் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே வேலு பரிதாபமாக இறந்தார்.தகவலறிந்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் விரைந்து வந்து வேலுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உணவு ஒவ்வாமையால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post பரோட்டா சாப்பிட்ட தொழிலாளி மூச்சு திணறி பரிதாப சாவு: ஆவடி அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Avadi ,VELU ,BALAVEDU, GOVINDARAJPURAM ,Barota ,
× RELATED பைக்குக்கு மாத தவணை செலுத்த பெற்றோர்...